பக்கம் எண் :

88

  மன்வழி மரபுளார் வகுத்துக் காட்டிய
முன்வழி யிகப்பது முறைமை யன்றினி
உன்வழிச் சேறியேற் சேறி யொள்ளிய
என்வழி யேகுவன் யானென் றேகினான்.

25
   
  ஏகுவன் னெஞ்சனுக் கிரங்கி யெம்பிநீ
போகலை யெம்முடன் பொருந்து வாயெனிற்
சாகலை நித்திய சாம்பி ராஜ்ஜிய
போகபூ மியினலம் பொருந்து வாயென்றான்.
26
   
  பன்முறை வேதியன் பரிந்து கூவவும்
நன்முறை யறிகிலா னாச தேசத்துச்
சென்முறை துணிந்தனன் ஜீவன் மல்கிய
சொன்முறை நிற்பரோ கேடு சூழ்ந்துளார்.
27
   
  கல்லென வுரத்தவன் னெஞ்சன் கங்குலை
எல்லெனக் கூறியாங் கீறில் துன்பத்தைச்
சொல்லருஞ் சுகமெனத் துணிந்து போதல்கண்
டொல்லைமென் னெஞ்சனீ துசாவு வானரோ.
28
   
  உத்தம தோழநீ யுவந்து பேசிய
முத்திமா நகர்க்கொரு முதல்வ னாக்கிய
அத்தகு பாதைநீ யறிதி யோவஃ
தெத்திசை யேகுது மெழுக் வென்றனன்.
29
   
  துணைவநோக் காயிடைத் தோன்று கின்றவோர்
இணையறு சுடரரு கிடுக்க வாயிலை
அணையின்மற் றவையவ ணறிய லாகுமத்
திணிசுடர் குறிக்கொடு செல்ல வேண்டுமால்.
30
   
  பொருவருந் திருவருட் புணர்ப்பி னாலியாம்
இருவரு முடன்செல விசைந்து நின்றனம்
வெருவர லின்றிமேல் விரைந்து செல்வதே
கருமமிப் பெருவெளி கடத்து மென்றனன்.
31
   
  வஞ்சமில் வேதியன் வகுத்தல் கேட்டுமென்
நெஞ்சனு மொருப்படீஇ நெறியைப் பற்றினான்
எஞ்சுறா திருவரும் விரைவி னேகினார்
பஞ்சர நீத்தபைங் கிளியின் பான்மையார்.
32
   
                 யாத்திராரம்பப் படலம் முற்றிற்று.
   
 
அவநம்பிக்கைப் படலம்
 
   
  இன்ன தன்மைய ரிருவரும் பெருவெளி யிசைந்து
மன்னிவ் வோரடித் தடத்தைவிட் டயற்புறம் வழுவில்
துன்னு மின்னலென் றஞ்சின ராய்ச்சுவி சேஷன்
சொன்ன சொற்குறி கடைப்பிடித் தேகினர் துணிந்து.
1
   
  ஆய காலைமென் னெஞ்சனிங் காரையுங் காணோம்
தூய வேதிய நாஞ்செலத் துணிந்தகா ரியமென்
போயி னிக்குடி புகுமிடம் யாதவண் புகுவோர்க்
கேயு நற்சுகா னந்தமென் னியம்புதி யென்றான்.
2
   
  நன்று நின்வினா வுத்தரஞ் சுருதியே நவிலும்
அன்றி யெம்மனோர் வாக்கினுக் கதீதமா மையம்
ஒன்றி டாதுகேட் டுய்த்துணர்ந் திடுகவீ துண்மை
என்று புத்தகச் சுருள்படித் திவையிலை யியம்பும்.
3
   
  ஜீவ ரக்ஷையை நாடிநாஞ் சென்றுசே ரிடந்தான்
ஓவ வில்பர, லோகராஜ் ஜியமஃ துற்றால்
மேவ ரும்பர மானந்த சுகநிலை மேவும்
தாவி னித்திய ஜீவனைப் பெறுவதுஞ் சரதம்.
4
   
  துன்ப வாழியின் மூழ்கிவெந் துயரெலாந் துடைத்து
மன்ப தைக்கழி யாப்பதம் வழங்கிய வரதன்
அன்பு மல்கிய ஜீவமா நதித்துறை யாடிப்
பொன்பொ லிந்தசெஞ் சேவடிக் கற்பகம் புகுவாம்.
5
   
  விழுத்த குங்கதி ரொளிதிவள் வெண்டுகில் புனைந்து
வழுத்து தற்கரு மகிமையொண் மௌலியைச் சூடிப்
பழுத்த பத்தியிற் பரவச ராகிநம் பரனைத்
தொழத்த குஞ்சுர கணங்களோ டடியிணை தொழுவாம்.
6
   
  புனித ராகிய புங்கவர் புரையில்புத் தேளிர்
நனிதி ருப்பணி விடைபுரி தூதர்நம் பனுக்காய்த்
துனிசு மந்துயிர் விடுத்துவான் கதிபெற்ற சூரர்
இனிதி னேத்துபல் லாண்டிசை செவிமடுத் திடுவாம்.
7
   
  ஜீவ தாருவின் செழுங்கனித் தீஞ்சுவை யமிர்த
தேவ போனக மாரவுண் டானந்தந் தேக்கி
ஓவி லன்பொடு துதிபகர்ந் துவந்தினி திருப்பாம்
பாவ சங்கடம் யாவையு நம்முழை படரா.
8