பக்கம் எண் :

89

  இல்லை நோய்பசி தாகமா தியதுய ரென்றும்
இல்லை முப்பகை யான்வரு முபாதிக ளென்றும்
இல்லை வேதனை யுற்றழு கண்கணீ ரென்றும்
இல்லை யோர்குறை யெம்பிரா னிராஜ்ஜியத் தென்றும்.

9
   
  வாக்கி னான்மனத் தாலளப் பரிதிம்மாண் கதியிற்
போக்கு வித்தெமைப் புரப்பது புரவலன் புதல்வன்
ஆக்கு புண்ணிய மதற்கெமைப் பக்குவப் படுத்திக்
காக்க வல்லதிங் காழிவேந் தாவியின் கருணை.
10
   
  இன்ன தோர்ந்தருள் வாக்கினை மதித்திள வரசன்
தன்னை மெய்விசு வாசத்தி னாற்றன தாக்கிப்
பின்ன மற்றநல் லாவியின் பேரருள் பேணி
நன்னெ றிப்படி யிறுவரை நணுகு மப்பேறு.
11
   
  சுருதி நூல்படித் திவ்வணங் கிறிஸ்தவன் சொல்லக்
கருதி யாங்குமென் னெஞ்சனும் வியந்துளங் களித்துப்
பெரிது நம்வழி தாழ்ப்பது பிழைவிரைந் தோடி
வருதி யென்றலும் வேதியன் றன்னிலை வகுப்பான்.
12
   
  ஒன்று கேட்டிமென் னெஞ்சவென் னுற்பவந் தொடங்கி
நின்ற வல்வினை யீட்டிய தீவினை நெருங்கித்
துன்றி யென்முது குளுக்குற நிமிருமத் துனியாற்
பின்று கின்றன னீயது பெறுகிலா யென்றான்.
13
   
  இத்தி றத்தசம் பாஷணை யியைந்திரு வோரும்
மித்தி ரத்துவ மாகின ராய்வெட்ட வெளியின்
மத்தி யிற்செலும் போதொரு மருங்குசே ருளையிற்
சித்த சாஞ்சலி யத்தினால் விழுந்தனர் திகைத்து.
14
   
  திகைத்து வீழ்ந்துதத் தளித்துடன் முழுவதுஞ் சேறாய்
அகைத்து ழக்கிநின் றடிபெயர்த் திடவொணா கழுந்தி
உகைத்தென் செய்வலென் றுஞற்றிய பெரும்பிழை யுன்னி
மிகைத்த சிந்தையான் வேதியன் வெருண்டுள மெலிந்தான்.
15
   
  இளைய னாகமென் னெஞ்சனுஞ் சிறுபொழு தினைந்து
புனையு நன்மொழி புகன்றெனைத் தெருட்டிய புலவோய்
எனைய துன்னிலை யிறங்கிடு துறையினீத் தென்றாற்
பினையு றுங்கதி விதந்துரை யாடவும் பெறுமோ.
16