பக்கம் எண் :

சீறாப்புராணம்

1076


இரண்டாம் பாகம்
 

கண் அவதரித்தவன், எனது தாய் தந்தையர்களாகிய இருவர்களும் பொருந்திச் சல்மா னென் றிட்ட அழகிய நாமத்தை யுடையவன்.

 

2896. அப்பெரும் பதியில் வளர்ந்தனன் சிலநா

          ளாதியி னூழ்வினைப் பயனா

     லிப்பெரும் பதியோர்க் கடிமைய னானே

          னிப்பொழு திதற்குமு னயங்கூர்

     செப்பரு நூல்கள் பலபல வுணர்ந்துஞ்

          செவிவழி யொழுகிடப் பெரியோ

     ரொப்பரு மறைநூ லுரைத்தவை கேட்டு

          முளத்தறி வொடுமிருந் தனனால்.

5

      (இ-ள்) அந்தப் பெருமையை யுடைய நகரத்தின் கண் சில தினமாக வளர்ந்து யாவற்றிற்கு முதன்மையனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் பழ வினையினது பயனால் இந்தப் பெரிய திரு மதீனமா நகரத்தார்க்குத் தொண்ட னாயினேன். இப்போது இதற்கு முன்னர் இன்பமாக ததிகரிக்கப் பெற்ற சொல்லுதற் கருமையான பற்பல கிரந்தங்களைப் படித் தறிந்தும் காதுகளின் மார்க்கமாய் ஒழுகும் வண்ணம் ஒப்புக் கூறுதற்கரிய வேத சாஸ்திரங்களைப் பெரியோர்கள் சாற்ற, அவற்றைக் கேள்வி யுற்றும் இதயத்தி னுணர்வோடு மிருந்தேன்.

 

2897. தெரிதரு மறைகண் மூன்றினும் பெரியோர்

          செய்யுளிற் கணிதநூ லிடத்து

     மருளினி லுருவாய்த் தோன்றியே யாதத்

          தைம்பதின் றலைமுறைப் பின்னர்

     நரர்களி னொளிவி னுருவமைந் தாதி

          நபியவ தாரமென் றெடுத்து

     வருமவர் தமக்குத் தெளிதரும் புறுக்கான்

          மறைமொழி யிறங்கிடு மெனவும்.

6

      (இ-ள்) அவ்வா றிருந்து விளங்கா நிற்கும் தௌறாத்து, இஞ்சீல், சபூ றென்னு மூன்று வேதங்களி னிடத்தும், பெரியோர்களாற் செய்யப் பட்ட கிரந்தங்களி னிடத்தும், கணித சாஸ்திரங்களி னிடத்தும், அருளினால் உருவமாகத் தோற்றமாகி மூல பிதாவான நபி ஆத மலைகிஸ்ஸலா மவர்களினது ஐம்பதாம் தலை முறையின் பின்னர் மனுஷியர்களில் ஒளிவோடு கூடிய தோற்றத்தை யமையப் பெற்று எல்லா நபிமார்களுக்கும் முதன்மையான நபியென்று அவதாரத்தைத் தாங்கி வருகின்ற அந் நபிகட் பெருமானாவர்களுக்குத் தெளிந்த புறுக்கானுல் மஜீ தென்னும் வேத வசனமிறங்கு மென்றும்.