பக்கம் எண் :

சீறாப்புராணம்

1077


இரண்டாம் பாகம்
 

2898. அந்நெறி மறையின் முறைவழி யொழுகி

          நின்றவ ரரம்பையர்ச் சேர்ந்து

     பொன்னுல காள்வ ரென்னவு மறுத்தோர்

          பொறிதெறித் தெரியழற் குழியிற்

     பன்னெடுங் கால மழுந்துவ ரெனவுந்

          தெரிந்தனன் பரவைசூழ் புவியி

     னெந்திலத் துதித்தா ரென்பதை யறிய

          வேண்டுமென் றெழுந்தன னெளியேன்.

7

      (இ-ள்) அந்தச் சன் மார்க்கத்தை யுடைய புறுக்கானுல் கரீ மென்னும் வேதத்தினது தீனுல் இஸ்லாமென்ற மெய்ம் மார்க்கத்தினொழுங்கில் நடந்து நின்றவர்கள் அரம்பையர்களாகிய கூறுலீன்களை மருவிச் சொர்க்க லோகத்தின் கண் ஆட்சி செய்வார்களென்றும், அதை மறுத்தவர்கள் நெருப்புப் பொறிகள் தெறித்து எரியா நிற்கும் அக்கினிக் குழியாகிய நரக லோகத்தில் நீண்ட பலகாலங் கிடந்து அழுந்துவார்க ளென்றும், எளியேனாகிய யான் அறிந்து சமுத்திரஞ் சூழ்ந்த இப் பூமியின் கண் எந்த நகரத்தினிடத்து அந் நபிகட் பெருமானவர்கள் அவதரிப்பார்களென்பதைத் தெரிய வேண்டுமென்று எழும்பினேன்.

 

2899. நாற்கடற் பரப்பி னெண்டிசைப் புறத்தின்

          றேயங்க டொறுந்தொறு நடந்து

     நூற்கடற் கரைகண் டவர்கள்பா லடுத்துக்

          கேட்டலு நூதன நபியாய்

     மார்க்கமுங் கொண்டிவ் வறபினில் வருவா

          ரென்றுரைத் தனரவர் வகுத்த

     தாற்கலை வல்லோய் காட்சியி னரிய

          வித்திசை புகுந்தன னடியேன்.

8

      (இ-ள்) சாத்திர வல்லுந ராகிய நபிகட் பெருமானே! தொண்டனாகிய யான் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கென்னுஞ் சமுத்திரத்தை யுடைய இப் பூப் பரப்பினது எண்டிசைகளின் பக்கத்திலுள்ள தேசங்க ளெல்லாவற்றிலும் நடந்து சென்று வேத சாத்திரங்க ளாகிய சமுத்திரத்தைத் தாண்டிக் கரை கண்ட மேதாவிகளினிடத்து நெருங்கிக் கேட்டவளவில், அவர்கள் புதிய நபியாகத் தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தையுங் கொண்டு இந்த அறபி ராச்சியத்தில் வருவாரென்று கூறினார்கள். அவர்கள் அவ்விதங் கூறியதால் அற்புதத்தினா லருமையான இந்தத் திக்கின் கண் வந்து சேர்ந்தேன்.