|
இரண்டாம் பாகம்
2900.
அறபெனுந் தலத்தில் ஞானவா ருதிக
ளாமெனத் திசைதொறுந் துதிப்பக்
குறைசியங் குலத்தி லுதித்துநன் னூல்கள்
கோதறத் தெரிந்துநந் நயினார்
பிறவியெவ் விடமெங் கிருப்பவர் மார்க்கப்
பெயரெவை யெனத்தெளிந் தறிந்து
நறைகமழ் புயத்தோய் நும்வழிப் படுதற்
கிருந்தனர் பெரியர்க ணால்வர்.
9
(இ-ள்) அன்றியும்,
வாசனை பரிமளிக்கா நிற்கும் தோள்களையுடைய நபிகட் பெருமானே! இந்த அறபென்று கூறும் தேயத்தின்
கண் பெரியோர்களான நான்கு பேர்கள் ஞானச் சமுத்திரங்களாகு மென்று திக்குக ளெல்லாவற்றிலும்
புகழும் வண்ணம் அழகிய குறைஷிக் கோத்திரத்தி லவதரித்துக் களங்கமற நல்ல கிரந்தங்களை வாசித்
துணர்ந்து நமது நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசுல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவதாரஞ்
செய்யும் இடம் யாது? அவர்கள் தங்கி யிருக்குமிடம் யாது? அவர்களின் மார்க்கத்தின் நாமம்
யாது? என்று தேறித் தெரிந்து உங்களது தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தின் உட்படுவதற்
கிருந்தார்கள்.
2901.
மூதுரைக் குரிய சைதும்நன் னிலையின்
முதியரில் ஒறக்கத்தென் பவரும்
வேதிய ரெனும்பேர் தருமுது மானும்
விறலுடை யுபைதுல்லா தானும்
பேதியா நினைவின் முகம்மதைக் காண்போ
மென்னுமவ் வேட்கையின் பெருக்காற்
றீதிலா திதயங் களிப்புறத் தேடிப்
போயினர் பலபல திசையில்.
10
(இ-ள்) அவ்வா
றிருந்த மூதுரைக் குரிமையரான சைதென்பவரும், நல்ல நிலைமையை யுடைய மூத்தோர்களில் உறக்கத் தென்று
சொல்லப் பட்டவரும், வேதிய ரென்ற நாமத்தைத் தந்த உதுமா னென்பவரும், வெற்றியை யுடைய உபைதுல்லா
வென்பவரும், யாம் மாறுபடாத சிந்தனை யோடு நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களைக் கண்களினாற் பார்ப்போ மென்ற அப் பேராசையினது
அதிகரிப்பால் மன மானது களங்க மின்றிச் சந்தோஷ முறும் வண்ணம் உங்களை விசாரித்துப் பற்பல
திசைகளிற் போயினார்கள்.
|