|
இரண்டாம் பாகம்
2902.
திறலுடை சைதுஞ் சாமிராச் சியத்திற்
சென்றருங் கணிதரைக் கேட்ப
நறைவிரி யலங்கற் புயத்திபு றாகீம்
நன்னபி நடத்திய மார்க்க
முறைவழி முகம்ம தெனுநபி யறபின்
வருகுவ ரெனவவர் மொழிய
வுறுதியின் றிரும்பி வருநடு வழியி
னிறந்தனர் முறைமையி னுரவோய்.
11
(இ-ள்) மூத்தோ
ராகிய நபிகட் பெருமானே! அவ்வாறு போயதில் வெற்றியை யுடைய சை தென்பவரும் ஷாமிராச்சியத்திற்
போய் அங்குள்ள அரிய கணித சாஸ்திரிகளை விசாரிக்க, முகம்மதென்று சொல்லுகின்ற நபியானவர்
வாசனை பரவா நிற்கும் பூ மாலையைத் தரித்த இபுறாகீ மலைகிஸ்ஸலா மென்னும் நன்மையைக் கொண்ட
நபியானவர் நடாத்திய தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தினது ஒழுங்கின் வண்ணம் அறபி
ராச்சியத்தின் கண் வருவாரென்று அச் சாஸ்திரிகள் கூற, தைரியத் தோடுந் திரும்பி வருகின்ற
மத்திய பாதையில் ஒழுங்குடனிறந்தார்.
2903.
ஒறக்கத் தென் பவருந் திசைதொறுந் திரிந்து
மக்கமா நகரினி லுறைந்து
துறக்கமும் புகழுஞ் சுரிகுழற் கதீசா
வென்னுமத் தோகைக்கு நிதமுஞ்
சிறக்குநும் புதுமைக் காரண மனைத்துஞ்
செப்பிநல் வழிக்குரி யினராய்
நறைக்கதிர்க் கமலப் பதம்பணிந் திருந்தா
ரறியலா நடுநிலை மறையோய்.
12
(இ-ள்) அன்றியும்,
நீதியைக் கொண்ட புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தை யுடைய நபிகட் பெருமானே! உறக்கத் தென்று
சொல்லப் பட்டவரும் திக்குக ளெல்லாவற்றிலுந் திரிந்து திரு மக்கமா நகரத்தின் கண் தங்கிச்
சொர்க்க லோகத்தினருந் துதிக்கா நிற்குஞ் சுரிப்பைப் பொருந்திய கூந்தலை யுடைய கதீஜா வென்று
கூறும் அந்த மயி லானவர்கட்குப் பிரதி தினமும் சிறந்த உங்களின் அற்புதத்தினது காரணங்க
ளெல்லாவற்றையுஞ் சொல்லி நல்ல நெறியினுக்குரிமைய ராகி வாசனையையும் பிரகாசத்தையுங் கொண்ட
தாமரை மலர் போன்ற உங்களது பாதங்களிற் றாழ்ந்து இருந்தார். அஃது உங்களுக்குத் தெரியலாம்.
|