பக்கம் எண் :

சீறாப்புராணம்

1103


இரண்டாம் பாகம்
 

2976. கருத்தினிற் புந்தியற் றிருக்குங் காபிர்காள்

     பெருத்திடு மறமதைக் குறித்துப் பிந்தியீண்

     டிருத்தலைப் புதுமையென் றிசைக்கின் றீரெனத்

     திருத்தியே யுரைத்திட மறுத்துச் செப்புவார்.

12

      (இ-ள்) சிந்தையி னிடத்து அறிவற் றிருக்கின்ற காபிர்களே! நீங்கள் யான் பொலியா நிற்கும் ஹறத்தை மனதின் கண் மதித்துப் பின்னடைந்து திரும்பி யிருப்பதை ஆச்சரிய மென்று கூறுகின்றீர்களென்று செவ்வை யாக்கிச் சொல்ல, அவர்கள் மறுத்துக் கூறுவார்கள்.

 

2977. குதிமறுத் தறமதைக் குறித்து நின்றதே

     புதுமையென் றிருந்தனம் பொருவி லாதநன்

     மதியொடு மின்றுநீ யுரைத்த வாசக

     மதனினும் புதுமையென் றறைந்திட் டார்களால்.

13

      (இ-ள்) நீ யுனது சாட்டத்தை வெறுத்து ஹறத்தைச் சிந்தையின் கண் மதித்து நின்றது தான் புதுமை யென்று யாங்க ளிருந்தோம். இன்றையத் தினம் ஒப்பற்ற நல்ல அறிவோடும் நீ கூறிய வசன மானது அதனிலும் ஆச்சரிய மென்று சொன்னார்கள்.

 

2978. குறித்துநின் றெதிர்ந்தியான் கூறும் வாய்மையெப்

     புறத்தினு மறிகிலாப் புதுமை யென்கின்றீ

     ரறத்தினுக் குரியவ னாணை யும்மிடத்

     துறப்பெரும் புதுமையொன் றுளதென் றோதிற்றே.

14

      (இ-ள்) அவர்கள் அவ்விதஞ் சொல்ல, அவ் வோநாய் நீங்கள் யான் நின்று குறிப்பிட்டு எதிர்த்துப் பேசிய வார்த்தைகளை யெந்தப் பக்கத்திலுங் காணக் கூடாத ஆச்சரிய மென்று சொல்லுகிறீர்கள். புண்ணியத்திற் குரிமைய னான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் பேரி லாணை யாக உங்களிடத்தில் மிகவும் பெரிய ஆச்சரியமான தொன்றுள்ள தென்று கூறிற்று.

 

2979. கடத்துறை ஞமிலிநீ காணொ ணாதெம

     திடத்தினிற் புதுமையுண் டென்கின் றாயவை

     திடத்துட னியாவர்க்குந் தெரியச் செப்பெனத்

     தொடுத்தவர்க் கறிவுறச் சொல்லு கின்றதால்.

15

      (இ-ள்) அவ்வாறு கூற அவர்கள் வனத்தின் கண் தங்காநிற்கும் ஓநாயே! நீ எங்களிடத்தில் காணக்கூடாத ஓராச்சரிய மானதுள்ள தென்று சொல்லுகின்றாய்? அவற்றை யுண்மையுடன் எல்லாருக்கும் விளங்கும் வண்ணம் கூறென்று கேட்க, அவ்விதங் கேட்ட அவர்களுக்குப் புத்தியான துண்டாகும்படி அஃது கூறா நிற்கும்.