பக்கம் எண் :

சீறாப்புராணம்

1106


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) சத்துராதிகள் தமது வீரமானது கெடும்படி தளர்ந்து வேறொரு பெரிய ஊரின் கண் போய்த் தங்கினார்களே யானாலும் அவர்கள் மதிமயங்கும் வண்ணம் அன்னிய இராச்சியத்தையுடைய அரசர்களினால் அவர்கள்பால் விரோதத்தை மூளச் செய்தும் அவர்களினது கருவை இல்லாமலொழித்து அவர்களின் விரோதத்தையும் இல்லாமற் செய்தல் வேண்டும்.

 

2988. திறைபல வழங்கினுஞ் சேர்ந்து கைகுவித்

     திறையென நிற்பினு மினிது கூறினுங்

     கறைகெழுங் கொடுமனக் கருத லார்தமை

     யுறவென நினைத்திட லுணர்வுக் கீனமால்.

24

      (இ-ள்) அன்றியும், அவர்கள் பல அரசிறைகளைக் கொடுத்தாலும் பொருந்தி இரு கைகளையும் குவித்து எங்களரசென்று சொல்லி நின்றாலும், இனிமையான சமாச்சாரங்களைச் சொன்னாலும், குற்றமானது நிறையப் பெற்ற கொடிய இதயத்தையுடைய சத்துராதிகளை நேயர்களென்று எண்ணுவது புத்திக் கிழி வாகும்.

 

2989. அடுத்துறைந் திலரென வெள்ள லன்றிக

      லெடுத்திடுங் கருதல ரிருந்து நாட்குநாட்

      டொடுத்திடும் வினையமுஞ் செயலுஞ் சூழ்ச்சியும்

      விடுத்திடு மொற்றராற் றெரிய வேண்டுமால்.

25

      (இ-ள்) அன்றியும், அவர்கள் நமக்குச் சமீபத் திருந்தில ரென்று சொல்லித் தள்ள லாகாது. பகைமையைத் தாங்கிய சத்துராதிகளாகிய அவர்களிலிருந்து பிரதி தினமும் ஆரம்பிக்கா நிற்கும் வஞ்சகங்களையும் செய்கைகளையும் அவர்களினது ஆலோசனைகளையும் நாம் விடுகின்ற தூதர்களால் அறிதல் வேண்டும்.

 

2990. வைகின னிந்நகர் வடுவுந் தீமையும்

       பொய்யினின் முடித்தரும் புந்தி யோர்களை

       வெய்யவ ராக்கினன் மேலுந் தீவினை

       செய்கல னெனமனந் தேற லன்றரோ.

26

      (இ-ள்) அன்றியும், இந்தத் திரு மக்கமா நகரத்தின் கண் உறைந்திருந்தவ னான அந்த முகம்ம தென்பவன் குற்றங்களையும் கேடுகளையும் பொய்யினால் முடித்து அருமையான அறிவையுடையோர்களைக் கொடியவ ராக்கினான். மேலும் அவன் கொடிய செய்கைகளைச் செய்ய மாட்டா னென்று இதயத்தின் கண் தெளிந்திருத்தலாகாது.