பக்கம் எண் :

சீறாப்புராணம்

1128


இரண்டாம் பாகம்
 

அவர்கள் வாழ்க்கைத் துணையாக வரா நிற்கும் மேன்மையைப் பார்த்துச் சத்துருவத்தைப் பெய்ர்த்து வீசுகின்ற வெள்ளிய வேலாயுதத்தை யுடைய ஆண் சிங்கத்தை நிகர்த்த காளைப் பருவத்தைக் கொண்ட செவ்வை யாகிய ஒழுங்கை யுடைய அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்கள் தங்களின் மனதின்கண் பிரதி தினமும் மோக மான துண்டாகப் பெற்றார்கள்.

 

3058. நகரவ ருரையுஞ் சூழ்ந்த நாட்டவர் விடுக்குந் தூதர்

     பகருநன் மொழியு மற்றோர் தீட்டுபா சுரத்தின் கூறும்

     நிகரரும் வள்ள லுள்ளத் திருத்திய நினைவு மோர்ந்து

     வகையுறா தீற்றி னெண்ணத் தாலுளம் வருந்தி னாரால்.

18

      (இ-ள்) அன்றியும், அந்தத் திரு மதீனமா நகரத்தை யுடையவர்களின் வார்த்தைகளையும், அங்கு சூழ்ந்த நாட்டையுடையவர்கள் அனுப்பாநிற்குந் தூதர்கள் வந்து சொல்லும் நன்மை பொருந்திய வசனங்களையும், மற்றவர்கள் எழுதிய நிருபத்தினது தன்மைகளையும், ஒப்பற்ற வள்ளலான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தங்களின் மனதின்கண் ணிருத்திய சிந்தனையையுஞ் சிந்தித்து வகையுறாமல் முடிவினது கருத்தினால் இதய மானது துன்ப முறப் பெற்றார்கள்.

 

3059. மின்னுருக் கொண்ட கன்னி விளங்கிழை நலத்தை நாடி

     மன்னர்க ளுளந்தே றாது வதுவையின் மயக்குற் றாரேற்

     பன்னெடு நாளிற் காம மனத்தினுட் படுத்திப் பாவை

     தன்னைவைத் திருக்கும் வேந்தர் கருத்தையார் சாற்ற வல்லார்.

19

      (இ-ள்) அன்றியும், மின்னலைப் போலும் வடிவத்தைக் கொள்ளப் பெற்ற கன்னிப் பருவத்தைத் தாங்கியவர்க ளான பிரகாசியா நிற்கும் ஆபரணங்களைத் தரித்த அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் இன்பத்தை விரும்பி அரசர்கள் மனமானது தெளிதலடையாது விவாகத்திற் காக மயக்க முற்றார்களேயானால் நீண்ட பல காலமாக ஆசையை இதயத்தி னகத்திற் படுத்திப் பாவை யாகிய அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களை வைத் திருந்த அரசரான அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களின் எண்ணத்தைக் கூற வல்லவர்கள் யாவர்? ஒருவரு மில்லர்.

 

3060. குனிசிலைப் புருவ வாட்கட் கொடியிடைக் கரிய கூந்தற்

     கனியிதழ்ச் சிறுவெண் மூரற் காரிகை நலத்தை நாடி 

     நினைவுநித் திரையும் போக்கி நீடொடு குழியி னார்ந்த

     நனிமதக் களிறு போன்று வேட்கையி னடுங்கி னாரால்.

20