|
இரண்டாம் பாகம்
(இ-ள்) அன்றியும்,
வளைக்கா நிற்கும் கோதண்டத்தை நிகர்த்த புருவத்தையும் வாளை நிகர்த்த கண்களையும் கொடியை நிகர்த்த
இடையையும் கரு நிறத்தை யுடைய கூந்தலையும் கோவைக் கனியை நிகர்த்த அதரங்களையும் சிறிய வெண்ணிறத்தைக்
கொண்ட பற்களையுமுடைய பெண்ணாகிய அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் இன்பத்தை
விரும்பித் தங்களின் சிந்தனையையுந் தூக்கத்தையு மொழித்து நீளமாகத் தோண்டிய குழியிற்
பொருந்திய மிகுத்த மதங்களைக் கொண்ட யானையை யொத்து ஆசையினால் நடுக்கமுற்றார்கள்.
3061.
குயினுறை சிகர மேருக் குலவரை
யனைத்தும் வென்று
வயிரவொண் வரையின் மீறு
மாணெழிற் புயங்கள் சேந்த
கயிரவ மனைய செவ்வாய்க்
காரிகை மம்மர் நோயால்
வெயில்படு மலரின் வாடி மென்மையின்
மெலிந்த வன்றே.
21
(இ-ள்) அன்றியும், மேகங்கள்
தங்கா நிற்கும் கொடு முடியைக் கொண்ட மகா மேரு அட்ட கிரிக ளாகிய யாவையும் ஜெயித்து ஒள்ளிய
வயிர மலையைப் போலும் ஓங்கிய மாட்சிமை பெற்ற அழகிய அந்த அலி றலி யல்லாகு அன்கு அவர்களின்
இரு தோள்களும் செந்நிறத்தைப் பெற்ற குமுத மலரை யொத்த சிவந்த வாயையுடைய கன்னியாகிய அந்தக்
காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின் மயக்க மாகிய வியாதியினால்
வெயிலினுட் பட்ட புஷ்பத்தைப் போலும் வாட்ட முற்று மிருதுவாய் மெலிவடைந்தன.
3062.
விண்கணி னமரர் கோமான் மேதினிக்
குரைத்த வேதப்
பண்கனிந் தொழுகுஞ் செவ்வாய்ப்
பாத்திமா வென்னு மந்தப்
பெண்கனி யுருவத் தார்ந்த பேரெழிற்
கடலி லாழ்ந்து
கண்களின் மறுத்துத் தோன்று
முருவன்றிக் காண்கி லாரே.
22
(இ-ள்) அன்றியும், அவர்கள்
தேவ லோகத்தி னிடத் துள்ள தேவர்களாகிய மலாயிக்கத்து மார்களுக்கு அதிபதி யான ஜிபுரீல்
அலைகிஸ்ஸலா மவர்கள் இப் பூமியின் கண் ணுள்ள மாந்தர்களுக்காகச் சொன்ன புறுக்கானுல் மஜீ தென்னும்
வேதத்தினது பண்ணானது கனிவுற்றுச் சிந்தா நிற்கும் சிவந்த வாயை யுடைய பாத்திமா றலி யல்லாகு
அன்ஹா வென்று சொல்லும் அந்தப் பெண்களில் கனியானவர்களின் வடிவத்திற் பொருந்திய பெரிய
அழகாகிய சமுத்திரத்தில் மூழ்கித் தங்களின் விழிகளில் மறுத்துத் தெரிகின்ற உருவெளித் தோற்ற
மல்லாது வேறொன்றையுங் காணார்கள்.
|