|
இரண்டாம் பாகம்
3063.
கலிதடுத் துலகங் காக்குங்
காவல ரினிதி னீன்ற
வொலிகட லமிர்த மொவ்வா
வொண்டொடி முகத்தின் வாய்ந்து
மலிதருங் கருமை யுண்ட வரிவிழிக்
கயல்கள் பாய
வலியெனும் வலிய வீர ரகக்கடல்
கலங்கிற் றன்றே.
23
(இ-ள்) அன்றியும், சிறுமையைத்
தடுத்து இவ்வுலகத்தைப் புரந்த அரச ராகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் இனிமை யோடும் பெற்ற சத்திக்கா நிற்கும் சமுத்திரத்தினது
அமுதமு மொப்பாகாத ஒள்ளிய வளையல்களை யணிந்த அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களின்
வதனத்தினிடத்துச் சிறப்புற்று மிகுத்த கருநிறத்தைக் கொண்ட மையை யெழுதப் பெற்ற இரேகைகள்
படர்ந்த கண்களான கெண்டை மீன்கள் பாய, அலி றலி யல்லாகு அன்கு என்று சொல்லும் பெரிய வீரரின்
மன மாகிய சமுத்திரமானது கலக்கமுற்றது.
3064.
பற்றல ருடலந் தேய்த்துப்
பஃறலைக் குருதி யூற்றும்
வெற்றிவா ளலியென் றோதும்
வீரவெண் மடங்க னாளு
மிற்றசின் மருங்குல் பாத்தி
மாவெனு மிளமான் றன்னால்
வற்றுறா வலியும் போக்கி
மயக்குண்டு கிடந்த தன்றே.
24
(இ-ள்) அன்றியும், சத்துராதிகளின்
தேகத்தைக் குறைத்துப் பல தலைவர்களின் இரத்தத்தைச் சிந்துகின்ற விஜயத்தைக் கொண்ட வாளாயுதத்தை
யுடைய அலி றலி யல்லாகு அன்கு என்று கூறா நிற்கும் வீரத்தைப் பெற்ற வெள்ளிய சிங்க மானது பிரதி
தினமும் ஒடிந்த சிறிய இடையை யுடைய பாத்திமா றலி யல்லாகு அன்ஹா வென்று கூறும் இளம் பிராயத்தைப்
பொருந்திய அந்த மானினாற் குறையாத தனது வல்லமையையும் ஒழித்து மயக்க முற்றுக் கிடந்தது.
3065.
செறிகடற் பாரிற் றூண்டா
மணியினுஞ் செவ்வி வாய்ந்து
நிறைதருங் கற்பி னல்லா ரிடத்தினி
னிதமு மாறா
வறிவெனுந் தூது தன்னோ
டகமெனுந் துணையும் போக்கி
வறியரிற் றமிய ராகி
வாளலி மவுல லுற்றார்.
25
(இ-ள்) அன்றியும்,
வாளாயுதத்தைத் தாங்கிய அந்த அலி றலியல்லாகு அன்கு அவர்கள் நெருங்கிய சமுத்திரத்தைக் கொண்ட
இப்பூமியின் கண் தூண்டாத இரத்தினத்தைப் பார்க்கிலும் அழகானது சிறக்கப் பெற்றுப் பூரணப் பட்ட
கற்பை யுடைய மாதாகிய அந்தப் பாத்திமா றலியல்லாகு அன்ஹா அவர்களிடத்தில் பிரதி தினமும்
ஒழியாத அறிவென்று சொல்லுந் தூதினோடு அகமாகிய துணையையும் போகச் செய்து தாரித்திரர்களைப்
பார்க்கிலும் தாரித்திர ராகிச் சொல்லத் தொடங்கினார்கள்.
|