பக்கம் எண் :

சீறாப்புராணம்

1143


இரண்டாம் பாகம்
 

3097. கொடுத்தபத் திரத்தை வாங்கிக் கொழுமலர்க் கண்ணி லொத்தி

     விடுத்ததை விரித்துப் பைம்பொன் வரிமுறை விளங்க நோக்கி

     யடுத்தவர் பிறர்மற் றுள்ளோ ரியாவரு மறிய வல்லே

     தொடுத்தொரு மொழிவ ழாது வாசகஞ் சொல்ல லுற்றார்.

57

      (இ-ள்) அவ்வாறு கொடுத்த அந்தக் கடிதத்தை அத் துணைவர் வாங்கிச் செழிய தாமரைப் புட்பத்தை நிகர்த்த நயனங்களி லொத்தி அஃதைப் பிரித்து விரித்துப் பசிய பொன்னினா லான வரிகளினது ஒழுங்குகள் விளங்கும் வண்ணம் பார்த்துத் தங்களைச் சமீபத்திருந்தவர்கள் அன்னியர்கள் மற்று முள்ளவர்களாகிய யாவர்களும் உணரும் படி அதிற் கோத்த ஓர் வார்த்தை யேனுந் தவறாமல் அதிலெழுதி யிருந்த வாசகத்தை விரைவில் படிக்க ஆரம்பித்தார்கள்.

 

3098. என்னடி யவரின் மிக்கா முகம்மதி னினிதி னீன்ற

     பொன்னிழை தனக்கு மென்ற னலியெனும் புலிக்கு மின்ப

     மன்னிய வதுவைக் கான மகரென விசுலா முற்ற

     பன்னிகள் பவத்தி னுற்றோர் பல்லர்க்குங் குறைக டீர.

58

      (இ-ள்) எனது அடியார்களில் மேன்மைப் பட்ட முகம்ம தென்பவர் இனிமையோடும் பெற்ற பொன்னினாற் செய்யப் பட்ட ஆபரணங்களை யுடைய பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களுக்கும் எனது அலி றலி யல்லாகு அன்கு என்று சொல்லும் புலிக்கும் இன்ப மானது நிலைக்கப் பெற்ற விவாகத்திற்கான மகரென்று தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்திற் பொருந்திய பெண்களாகிய பாவத்தி லுற்றவர்க ளியாவருக்கும் அவர்களின் குற்ற மானது தீரும் வண்ணம்.

 

3099. இறுதிநா ளினின்மன் றாடித் தன்சபா அத்திலீ டேற்ற

     மறைதொறும் விளங்கச் சொல்லு முகம்மதுஞ் சபுற யீலு

     மறநெறி மீக்கா யீலுஞ் சாட்சிய தாக நானே

     மறுவறக் கபூல்செய் தேனென் றிருந்ததை வாசித் தாரால்.

59

      (இ-ள்) முடிவு கால மான கியாம நாளில் மன்றாடித் தனது ஷபாஅத்தினா லீடேற்றும்படி வேதங்கள் தோறும் விளங்கும் வண்ணங் கூறா நிற்கும் நபி முகம்மது சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் ஜிபுரீ லலைகிஸ்ஸலா மவர்களும் தரும நெறியை யுடைய மீக்காயீ லலைகிஸ்ஸலா மவர்களும் சாட்சியாக யான் கபூல் செய்தே னென்று களங்க மறும் வண்ணம் இருந்ததை வாசித்தார்.