பக்கம் எண் :

சீறாப்புராணம்

1146


இரண்டாம் பாகம்
 

யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களுக்கும், மேன்மையை யுடைய யாவற்றிற்கும் முதன்மைய னான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் மணமாகிய நிக்காகை நிறைவேற்றினான். அந் நிக்காகை எப்பதிகளிலும் சிறப்பானது பொருந்தவும், சத்துராதிகளான காபிர்கள் அடங்கவும், மேலும் இன்பமானது அதிகரிக்கவும், செய்வதற்குத் தகுதியான எல்லாவற்றையுஞ் செய்யுங்க ளென்று சொன்னார்கள்.

 

3106. பேறுய ராதி யாலி லாஞ்சனை பெற்ற சிங்கங்

     கூறிய வசனங் கேட்டுக் கொற்றவ ருவகை யெய்தி

     மாறிலா வளமை யோங்கு மதீனமா நகரை யின்னே

     வீறுயர் சிறப்புச் செய்ய முறையனை விளிமி னென்றார்.

66

 

      (இ-ள்) பதிவியினா லோங்கப் பட்ட யாவற்றிற்கும் முதன்மையனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவினால் பிடரின்கண் இலாஞ்சனையைப் பெற்ற சிங்க மாகிய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அவ்வாறு சொல்லிய வார்த்தைகளை அரசர்களான அவர்க ளியாவருங் கேள்வியுற்றுச் சந்தோஷத்தைப் பொருந்தி நீங்காத செல்வமானது ஓங்கா நிற்கும் இந்தத் திரு மதீனமா நகரத்தை இப்பொழுதே பெருமையினா லுயர்வுற்ற அலங்காரங்களைச் செய்யும் வண்ணம் ஒழுங்கைக் கொண்ட முரசறைவோனைக் கூப்பிடுங்க ளென்று சொன்னார்கள்.

 

கலிநிலைத்துறை

 

3107. குழுவின் மன்னவர் விளித்தன ரெனக்குறித் தெழுந்து

     தொழுது நின்றெவை பணியென வலிமணந் துலங்க

     முழுது மிந்நக ரறிந்திட மணமுர சறைக

     வெழுக வென்றலு மெழுந்தனர் கடிமுர சினரே.

67

 

      (இ-ள்) அவ்வாறு சொல்ல, மண முர சறைவோர்கள் கூட்டத்தைக் கொண்ட அரசர்களான அவ் வசுஹாபிமார்கள் கூப்பிட்டார்க ளென்று குறிப்பிட்டு எழும்பி வணங்கி நின்று எங்களுக்கு வேலைகள் யாவை? என்று கேட்க, அவர்கள் அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களின் விவாகமானது துலங்கும் வண்ணம் இந்தத் திரு மதீனமா நகரம் முற்றுந் தெரியும்படி விவாக முரசை யடியுங்கள், எழும்புங்க ளென்று சொன்ன மாத்திரத்தில் எழும்பினார்கள்.

 

3108. கடிகொள் வெண்சுதை சோகங்கள் கவினுறத் தடவி

     நெடிய கந்தரத் தினின்மலர் மாலைக ணிரப்பி

     யிடியின் மிக்கதிர் முரசுக ளெடுத்தெடுத் தேற்றிப்

     படிய ளந்திடுந் தெருத்தலை தொறுந்தொறும் படர்ந்தார்.

68