பக்கம் எண் :

சீறாப்புராணம்

1152


இரண்டாம் பாகம்
 

3124. கதிர்ம ணிக்கரும் பிளங்கமு கருங்கனிக் கதலிப்

     பதிக மாதளை தாழைமுட் புறக்கனிப் பனசம்

     விதிரு மென்றளிர் மாச்செழும் பழக்கொழு விஞ்சி

     மதுர மூறிய கனியொடுந் தூண்டொறும் வனைவார்.

84

      (இ-ள்) அன்றியும், தூண்க ளெல்லாவற்றிலும் பிரகாசத்தைக் கொண்ட முத்துக்களை யுடைய கரும்பு, இளங் கமுகு, அரிய பழங்களை யுடைய வாழை, பதிகம் போட்ட மாதளை , தாழை, புறத்தில் முட்களைப் பெற்ற பழத்தை யுடைய பலா, அசையா நிற்கும் மெல்லிய தளிர்களை யுடைய மா, செழிய பழங்களை யுடைய கொழு விஞ்சி ஆகிய இவைகளை அவற்றின் இனிமையானது சுரக்கப் பெற்ற கனிகளோடும் கட்டி யலங்கரிப்பார்கள்.

 

3125. பிரச மூறிய பன்மலர்த் தொகுதியின் பிறங்கி

     விரிக திர்ப்பல திரண்மணி வடத்தினும் விலையி

     னரிய பொன்னிழைத் துகிலினும் பல்பல வணியாய்த்

     திருந கர்ப்புற மெங்கணு மியற்றினர் சிறப்ப.

85

      (இ-ள்) அன்றியும், தேனானது சுரக்கப் பெற்ற பல புஷ்பங்களினது கூட்டத்தைப் போலும் பிரகாசித்து விரிந்த ஒளிவைக் கொண்ட திரண்ட பல இரத்தி னாபரணங்களினாலும் விலை யிடுதற் கரிய பொன் னூலினாற் செய்யப்பட்ட வத்திரங்களினாலும் பற்பல வரிசையாகத் தெய்வீகந் தங்கிய அந்த மதீனமா நகரத்தினது இடங்களெல்லாவற்றிலுஞ் சிறக்கும் வண்ணம் அலங்காரஞ் செய்தார்கள்.

 

3126. பூந்து ணர்ப்பசுங் காயொடும் பழத்தினைப் பூகஞ்

     சொந்த பந்தரிற் றென்றலி னுதிர்ப்பன திரட்டி

     வாய்ந்த பொன்னையு மரகத மணியையும் வாரி

     யீந்த மேலவர்ப் போன்றன வீதிக ளெங்கும்.

86

      (இ-ள்) அன்றியும், அந்தத் திரு மதீனமா நகரத்தின் வீதிகளின் எவ் விடங்களிலும் கமுக மரங்கள் பூங் கொத்துக்களைக் கொண்ட பசிய காயுடன் பழங்களைப் பொருந்தித் தென்றற் காற்றினால் பந்தரின் கண் சிந்துபவை, சிறந்த பொன்னையும் மரகத மணியையும் ஒன்று சேர்த்து அள்ளிக் கொடுக்கின்ற மேலோர்களை நிகர்த்தன.

 

3127. அரத்த வாடையின் பசியமென் றுகிறொடுந் தணியா

     நிறைந்தி ருப்பது மாமணித் தூண்டொறு நெடுவான்

     றரித்த கொண்டலி னிடம்விடுத் திந்திர சாபம்

     விரித்த பந்தரிற் புகுந்திருந் தெனப்பல விளங்கும்.

87