|
இரண்டாம் பாகம்
(இ-ள்) அன்றியும்,
பெருமை பொருந்திய இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற தூண்க ளெல்லாவற்றிலும் செந் நிறத்தைக்
கொண்ட வத்திரத்தில் மெல்லிய பச்சை வத்திரத்தைத் தொடுத்து அலங்காரமாய் வரிசையாக வைத்திருப்பது,
வான வில்லானது நெடிய ஆகாயத்தின் கண் தங்கிய மேகத்தினிடத்தை விட்டும் விரிவாகச் செய்த
அந்தப் பந்தரின்கண் புகுந்திருந்ததைப் போலும் பல விளங்கா நிற்கும்.
3128.
வெடித்த தாமரை மலரொடும்
விரிந்தவெண் டாழைத்
தொடுத்துப் பந்தரிற் றுயல்வரத்
தூக்கிய தோற்றம்
வடித்த நன்னறை யல்லியை யிதழொடும்
வாயி
னெடுத்து மென்சிறை யெகினங்கள்
படர்ந்தென விருந்த.
88
(இ-ள்) அன்றியும், அந்தப்
பந்தர்களில் மலர்ந்த தாமரைப் புஷ்பங்களுடன் விரிந்த வெண்ணிறத்தைக் கொண்ட தாழைப் புஷ்பங்களை
அசையும் வண்ணந் தொடுத்துத் தூக்கிய தோற்றங்களானவை, வடித்த நல்ல வாசனையை யுடைய அல்லிப்
புஷ்பத்தை அதன் இதழ்களோடும் மெல்லிய சிறகுகளை யுடைய அன்னப் பட்சிகள் தங்களின் வாயினாலெடுத்துப்
பரவிப் பறந்து செல்லுவதைப் போலிருந்தன.
3129.
வேரி யஞ்செழு மலர்களுந் தளிர்களும்
விளங்கச்
சாரு நன்கதிர்ப் பன்மணிக்
குலங்களுந் தயங்கக்
கூறு மாந்தர்தம் மனத்தினி
னினைத்தவை கொடுப்பப்
பாரிற் கற்பக வனத்தையொத்
திருந்தன பந்தர்.
89
(இ-ள்) அன்றியும், அந்தப்
பந்தர்கள் வாசனையைக் கொண்ட அழகிய செழிய புஷ்பங்களும் தளிர்களும் விளங்கவும், நல்ல பிரகாசத்தைப்
பொருந்திய பல இரத்தினக் கூட்டங்களும் பிரகாசிக்கவும், ஆராயுகின்ற மானுஷியர்கள் தங்களி னிதயத்தின்
கண் சிந்தித்தவைகளைக் கொடுக்கவும், இப் பூமியின் கண் கற்பகச் சோலையை நிகர்த்திருந்தன.
3130.
தரள மாமணி யரும்பின மீன்றுதா
ரணியின்
பரிவு பெற்றிடும் பொன்னிதழ்ப்
பன்மலர் பூத்து
மரக தச்செழு மணித்திரட்
காய்க்குலை வளர்த்துப்
புருட ராகங்கள் பழுத்தன
போன்றன பந்தர்.
90
(இ-ள்) அன்றியும், அந்தப்
பந்தர்கள் பெருமை பொருந்திய முத்து மணியாகிய அரும்புக் கூட்டங்களை யீன்று இவ் வுலகத்தின் கண்
இன்பத்தைப் பெறா நிற்கும் பொன்னாகிய இதழ்களைப் பெற்ற பல புஷ்பங்களைப் புஷ்பித்துச் செழிய
மரகத மணியாகிய திரண்ட காய்களைக் கொண்ட குலையை வளரச் செய்து புருடராகங்கள் பழுத்தனவற்றை
நிகர்த்தன.
|