பக்கம் எண் :

சீறாப்புராணம்

1155


இரண்டாம் பாகம்
 

3134. சொரிந்த பூங்குழன் மதிநுதற் கயல்விழித் துவர்வாய்

     முரிந்த தோவெனு மருங்கினர் முருகுகொப் பிளிப்ப

     விரிந்த சந்தகில் வயின்வயின் புகைத்திடல் விளங்கிப்

     பரந்து போர்வையின் மூடின நீள்பெரும் பதியை.

94

      (இ-ள்) அன்றியும், மதுவைப் பொழிகின்ற புஷ்பங்களையணிந்த கூந்தலையும், மூன்றாஞ் சந்திரனை நிகர்த்த நெற்றியையும், கெண்டை மீனை யொத்த கண்களையும், பவளம் போன்ற வாயையு முடைய ஒடிந்ததோ வென்று சொல்லா நிற்கும் இடையைப் பெற்ற மாதர்கள் வாசனையைக் கக்கும் வண்ணம் விரிந்த சந்தனக் கட்டைகளையும் அகிற் கட்டைகளையும் இடங்கள் தோறும் புகைக்கும் புகையானது, போர்வையைப் போலும் விளங்கிப் பரவி நீண்ட பெருமையைக் கொண்ட அந்த திரு மதீனமா நகரத்தை மூடிற்று.

 

3135. அங்க ராகமும் வரியளி மலரிடை யறுகாற்

     றங்கி வீழ்தரு துகளுங்குங் குமச்செழுந் தாது

     மெங்க ணும்பரந் திருநிலந் தெரிகிலா திருத்தல்

     பொங்கு பொன்னிலம் வதுவையிற் சமைத்தன போலும்.

95

      (இ-ள்) அன்றியும், பூசுகின்ற பரிமளங்ளும் இரேகைகளையும் ஆறு காற்களையு முடைய வண்டுகள் புஷ்பத்தின் கண் ணுறைந்து அதனால் வீழுகின்ற பூந்தாதுகளும், குங்குமத்தினது செழிய பொடிகளும், எவ் விடங்களிலும் பரவிப் பெரிய பூமியானது தெரியா திருப்பது, ஓங்கிய சொர்க்க லோகமானது வதுவையினாற் சமைந்ததை நிகரா நிற்கும்.

 

3136. குதித்த தேன்குழன் மடந்தைய ராடவர் குழுமிப்

     பதித்தெ ருத்தொறுங் கலவையிற் சேறுகள் படுத்தி

     விதித்த காரண வதுவையின் மணவிதை விதைத்து

     மதித்தி டும்பெறுஞ் சிறப்பெனும் பயிரினை வளர்த்தார்.

96

      (இ-ள்) அன்றியும், மது வானது சாடப் பெற்ற கூந்தலையுடைய பெண்களும் புருடர்களும் கூட்ட முற்று அந்தத் திரு மதீனமா நகரத்தினது வீதிக ளெல்லாவற்றிலும் கலவையாகிய சேறுகளைச் செய்து நியமித்த காரணத்தைக் கொண்ட அவ் வதுவையினது மண மாகிய வித்தை விதைத்து மதிக்கின்ற பெரிய சிறப்பென்று கூறா நிற்கும் பயிரை வளர்த்தார்கள்.

 

3137. சிந்து செங்கதிர் மணிதெளித் தெழுதுசித் திரத்தின்

     கந்த மான்மதங் கமழ்தலின் கதலிகை வனத்தின்

     விந்தை விந்தைசெய் தோரணத் தொகுதியின் வியப்பி

     னந்த மானக ரல்லன போன் றிருந் ததுவே.

97