பக்கம் எண் :

சீறாப்புராணம்

1157


இரண்டாம் பாகம்
 

கனிகளினாலும் செழிய காய்களினாலும் பூக்களினாலும் ஒன்றோடும் கலவாத பரிசுத்தத்தைப் பெற்ற நெய்யிற் சுனிதமாய் நல்ல சர்க்கரையுடன் இனிப்பு, புளிப்பு, ஓர்ப்பு, துவர்ப்பு, கைப்பு, கசப் பென்னும் அறு வகைச் சுவைகளும் தூங்கும் வண்ணம் வாசனை யோடும் இன்ப மானது அதிகரிக்கும் படி கறிகளைச் சமைப்பார்கள்.

 

3141. தேன வாந்தொடை மடந்தையர் குழலினுஞ் செருகி

     நான மார்புய மாந்தர்க ணாசியு மமட்டித்

     தான மானகர் மேனிலை யாவையுந் தடவி

     வான மீதினுங் கமழ்த்தின பொரிக்கறி வாசம்.

101

      (இ-ள்) அன்றியும், அங்கு செய்த பொரிக்கறிகள் தமது பரிமளத்தைத் தேனைப் பொருந்திய மாலைகளைத் தரித்த மாதர்ளின் கூந்தலிலும் செருகுத லுற்றுக் கத்தூரி வாசனை யானது பொருந்தப் பெற்ற தோள்களை யுடைய புருடர்களினது மூக்கையும் அமட்டி இடத்தைக் கொண்ட பெருமை பொருந்திய அந்தத் திரு மதீனமா நகரத்தினது மேனிலைக ளெல்லாவற்றையுந் தடவி ஆகாயத்தின் மீதும் பரிமளிக்கச் செய்தது.

 

3142. நனிவி ருந்தினர்க் கன்புட னெதிர்நடந் தழைத்துப்

    பனிம லர்ச்செழும் பாயலி னிருத்திமெய் பணிந்து

    மினுமி னென்றமுப் பழத்தினைத் தேனொடும் விரவி

    யினிதி னூட்டுவர் வலிதினி லடிக்கடி யெவரும்.

102

      (இ-ள்) அன்றியும், அங்குள்ள யாவர்களும் நெருங்கிய விருந்தாளிகளை அன்போடும் எதிராக நடந்து போய்க் கூட்டி வந்து குளிர்ந்த புஷ்பங்களினாற் செய்யப்பட்ட செழிய பாயலின்கண்ணிருக்கும்படி செய்து உடல் வணங்கி மினுமி னென்ற வாழை, பலா, மா வென்னும் முவ் வகைப் பழங்களையுந் தேனுடன் கலந்து அடிக்கடி இனிமையோடும் வலிதில் உண்ணச் செய்வார்கள்.

 

3143. உலவு பூம்புகை பொற்குடங் கமழ்தர வூட்டிச்

     சொலவ ருத்தடத் தெளிதரு புதுப்புனல் சொரிந்து

     பொலனி றத்தகுங் குமமுதன் முடிந்ததிற் புகட்டி

     யிலகு வீதியின் முன்றில்க டொறுநிரைத் திடுவார்.

103

      (இ-ள்) அன்றியும், பொன்னினாற் செய்யப்பட்ட குடங்களானவை பரிமளிக்கும் வண்ணம் உலவுகின்ற அழகிய தூமத்தையூட்டிச் சொல்லுதற் கருமையான வாவிகளின் தெளிந்த புதிய நீரை அதிற் சொரிந்து பொன்னினது நிறத்தைக் கொண்ட குங்கும முதலானவைகளை முடிந்து அதனுட் புகுத்திப் பிரகாசியா நிற்கும்