பக்கம் எண் :

சீறாப்புராணம்

1159


இரண்டாம் பாகம்
 

3147. பாடு வார்சிலர் குயிலெனக் பாடலுக் கெதிரி

     னாடு வார்சிலர் மயிலென வாடலுக் கழகாய்க்

     கூடு வார்சிலர் கிளியெனக் கூடலின் குறிகண்

     மூடு வார்சிலர் விரிதருங் கமலமென் முகத்தார்.

107

      (இ-ள்) அன்றியும், விரிந்த தாமரைப் புஷ்பத்தைப் போன்ற முகத்தை யுடையவர்களான சில பெண்கள் குயிலைப் போலும் பாடுவார்கள். சில பெண்கள் அவ்விதப் பாடலுக்கு எதிராக மயிலைப் போலும் ஆடுவார்கள். சில பெண்கள் அந்த ஆடலுக்கு அழகாய்க் கிளியைப் போலுங் கூடுவார்கள். சில பெண்கள் அவ்விதக் கூடலினால் குறிக்கின்ற நயனங்களை மூடுவார்கள்.

 

3148. பூசு வார்சிலர் கலைவியிற் புதுவிரை கலக்கி

     வீசு வார்சிலர் வீசலின் மெய்வழி வழியக்

     கூசு வார்சிலர் கூசுவ தென்னெனக் குழைந்து

     பேசு வார்சிலர் சிறுநுதற் பெரியகண் மடவார்.

108

      (இ-ள்) அன்றியும், சிறிய நெற்றியையும், பெரிய கண்களையுமுடைய இளம் பிராயத்தைப் பெற்ற மாதர்களான சில பெண்கள் கலவைச் சாந்தில் புதிய வாசனைத் திரவியங்களை விரவிப் பூசுவார்கள். சில பெண்கள் அஃதை வீசுவார்கள். அவ்விதம் வீசுவதினால் அஃது தேகத்தினிடத்து வழிய அதனால் சில பெண்கள் கூசுவார்கள். சில பெண்கள் அவ்வாறு கூசுவது யாது காரணத்தா லென்று குழைத லுற்றுப் பேசுவார்கள்.

 

3149. பொருவி லாநக ராடவ ரரிவையர் போற்ற

     மரும லர்ப்புய முகம்மதை யலிதமை வாழ்த்திக்

     கருத லர்க்கரி யேறெனுங் காளையர் கூடித்

     தெருவெ லாமணப் பைத்துகள் சொலித்சொலித் திரிவார்.

109

      (இ-ள்) அன்றியும், சத்துராதிகளாகிய யானைகளுக்கு ஆண் சிங்கத்தை நிகர்த்த காளைப் பருவத்தை யுடையவர்களான சில ஜனங்கள் ஒன்று சேர்ந்து ஒப்பற்ற அந்தத் திரு மதீனமா நகரத்தினது புருடர்களும் பெண்களுந் துதிக்கும் வண்ணம் வாசனையைக் கொண்ட புஷ்ப மாலையைத் தரித்த தோள்களை யுடைய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களையும், அலி யிபுனு அபீத் தாலிபு வீதிகளெல்லாவற்றிலும் விவாகத்தினது பைத்துக்களாகிய பாட்டுகளை மிகவுஞ் சொல்லிக் கொண்டு திரிவார்கள்.