பக்கம் எண் :

சீறாப்புராணம்

1184


இரண்டாம் பாகம்
 

3210. மின்னைவெண் சோதி சுற்றிக் கிடந்தன துகிலை வீக்கிப்

     பன்னருங் கருமே கத்தின் வெண்முகிற் படர்ந்த போல

     நன்னெடுங் கூந்தற் காட்டி னறும்புகை கமழ வூட்டித்

     தென்னுலா மணியின் சோதிச் சீப்பிட்டுச் சிறப்பிட் டாரால்.

170

      (இ-ள்) அன்றியும், மின்னை வெண் ணிறத்தைக் கொண்ட ஓர் மின்னானது வளைந்து கிடந்ததைப் போலும் அரையின் கண் வத்திரத்தைக் கட்டிச் சொல்லுதற் கருமையான கரிய மேகத்தினிடத்து வெள்ளிய மேகமானது படர்ந்ததைப் போலும் நன்மை பொருந்திய நீண்ட குழலாகிய வனத்தின்கண் நறிய தூமத்தைப் பரிமளிக்கும் வண்ண மூட்டி அழகானது உலவா நிற்கும் இரத்தித்தினது பிரகாசத்தைப் பெற்ற சீப்பினாற் சீவிச் சிறப்பிட்டார்கள்.

 

3211. முகமதிக் கிடைந்து சுற்றி மூதிருட் படல மியாவும்

     புகுமிட மிதுவென் றோதும் புரிகுழ லதனிற் சாந்துந்

     தகரமும் விரவி வெண்பூத் தனித்தனி சிதறி வாய்ந்த

     சிகழிகை முடித்து வாசச் செழுமலர்த் தொடையல் வேய்ந்தார்.

171

      (இ-ள்) அன்றியும், முக மாகிய சந்திரனுக்கு இடைத லுற்று முதிர்ந்த அந்தகாரப் படலங்க ளியாவுஞ் சுற்றிப் புகா நிற்குந் தானமானது இஃதென்று சொல்லும் முறுக்கைக் கொண்ட கூந்தலின் கண் கலவைச் சாந்தையும் தகரத்தையும் கலந்து வெண்ணிறத்தைக் கொண்ட புஷ்பங்களை ஒவ்வொன்றாகச் சிந்திச் சிறப்படைந்த கொண்டையைக் கட்டிப் பரிமளத்தைப் பொருந்திய செழிய புஷ்பத்தினாற் செய்யபட்ட மாலையைச் சூடினார்கள்.

 

3212. நுதற்பிறைக் கதிர்க ளோடி மேகத்தி னுளைந்த தென்னப்

     புதுக்கதிர்த் தரளச் சுட்டி புனைந்துமேற் சாத்துஞ் சாத்திக்

     கதத்தடற் படைவாள் வள்ளற் கவினறாப் பருக நாளு

     மதர்த்தரி படர்ந்த கண்ணின் மையெடுத் தெழுதி னாரால்.

172

      (இ-ள்) அன்றியும், நெற்றி யாகிய மூன்றாஞ் சந்திரனது கலைகள் விரைந்து சென்று மேகத்தி னிடத்து நுழைந்ததைப் போலும் புதிய பிரகாசத்தைப் பொருந்திய முத்துக்களைப் பதித்த சுட்டியைத் தரித்து மேற் சாத்துஞ் சாத்திக் கோபத்தையும் வலிமையையுங் கொண்ட யுத்தத்தினது வாளாயுதத்தை யுடைய வள்ள லான அவ் வலியிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களின் அழகாகிய மதுவை யருந்தும் வண்ணம் பிரதி தினமும் மதர்த்து இரேகைகளானவை படரப் பெற்ற விழியின் கண் மையை எடுத்துத் தீட்டினார்கள்.