பக்கம் எண் :

சீறாப்புராணம்

1187


இரண்டாம் பாகம்
 

3219. அணிக்கலங் கலவைச் செப்புக் கோடிக மடப்பை யேந்திப்

     பிணைக்கருங் கண்ணார் சூழப் பிறங்குசா மரைக டூங்கக்

     கணிப்பிலாத் துவாவு மாமீ னெனுஞ்சொலுங் கடல்போ லார்ப்ப

     மணக்கடி முரச மார்ப்ப முகம்மது மகளார் வந்தார்.

179

      (இ-ள்) அவ்வாறு நடத்த, நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களின் புதல்வியரான அந்தக் காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்கள் மானினது பார்வையை யொத்த கரிய கண்களை யுடைய பெண்கள் அணிக் கலன்களையும் பரிமளச் செப்புகளையும் பூந் தட்டுகளையும் வெற்றிலைப் பைகளையும், தாங்கித் தங்களை வளைந்து வரவும், ஒளிரா நிற்கும் சாமரங்கள் தூங்கவும், கணிக்க முடியாத துஆவும் ஆமீ னென்று சொல்லும் வசனமும் சமுத்திரத்தைப் போன்றொலிக்கவும், விவாகத்தினது தொனியைக் கொண்ட முரசங்கள் சந்திக்கவும், வந்தார்கள்.

 

3220. வந்தபொன் மயிலை யின்ப மறைநபி யென்னும் வள்ளற்

     சிந்தையுங் கண்ணு மாரச் செழுங்களி பெருகி யோடச்

     சுந்தர வருவி மாறாச் சுடர்வரை யிடத்திற் றோன்ற

     வந்தரத் திழிந்த மின்போ லலியிடத் திருத்தி னாரால்.

180

      (இ-ள்) அவ்வாறு வந்த பொன் வடிவமான மயிலாகிய அந்தப் பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களை இன்பத்தைக் கொண்ட புறுக்கானுல் மஜீதென்னும் வேதத்தை யுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மென்று சொல்லும் வள்ளலானவர்கள் தங்களின் மனமுங் கண்களும் பொருந்தவும், செழிய சந்தோஷமானது அதிகரித்து ஓடவும், அழகிய அருவியானது நீங்காத பிரகாசத்தையுடைய மலையினிடத்துத் தோன்றும் வண்ணம் ஆகாயத்தி னிடத்திருந்து இறங்கி வந்த மின்னைப் போல அந்த அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களின் இடப் பாகத்தி லிருத்தினார்கள்.

 

3221. மலிபொலன் கிரியிற் சோதி மணியினை யிருத்தல் போல

     அலியிடத் திருத்தும் பாவை யழகுகண் டுவந்து மேலோ

     ரொலிகடல் கிளர்ந்த தென்ன வுற்றவ ரெவருஞ் சூழ்ந்து

     பலனுற வாழ்த்தி வாழ்த்திப் பாத்திகா வோதுங் காலை.

181

      (இ-ள்) பெருகிய மகா மேருப் பருவதத்தி னிடத்துப் பிரகாசத்தைக் கொண்ட இரத்தின மணியை இருத்தியதை நிகர்த்து அந்த அலி றலி யல்லாகு அன்கு அவர்களின் இடது பக்கத்தில் அவ்வாறு இருத்திய பாவையாகிய அந்தக் காத்தூனே ஜன்னத்