பக்கம் எண் :

சீறாப்புராணம்

1189


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) இன்றைய இரவிற் பரிசுத்தத்தை யுடையவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் தேவர்களாகிய மலாயிக்கத்துமார்க ளனைவரையும் ஒளிவானது பிரகாசிக்கின்ற சொர்க்க லோக முழுவதிலும் வரிசை வரிசையாக அலங்காரங்களைச் செய்து அன்பாக வெற்றியைக் கொண்ட வாளாயுதத்தை யுடைய அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு அவர்களுக்கும், அழகானது பிரகாசியா நிற்கும் ஆபரணங்களை யுடைய காத்தூனே ஜன்னத் பீவி பாத்திமா றலி யல்லாகு அன்ஹா அவர்களுக்கும், திட்டியைச் சுற்றி விட்டு வீசுங்களென்று கூறினான்.

 

3225. வல்லவ னுரைம றாம லெண்ணில்வா னவர்கள் கூண்டு

     சொல்லருஞ் சுவன நாட்டுச் சுடர்மணி மனைக டோறும்

     பல்லவத் துணர்ப்பைங் காவும் வீதியும் பல்பல் கோடி

     யெல்லவ னிருந்த தென்ன மணிவிளக் கியற்றி னாரால்.

185

      (இ-ள்) அவ்வாறு சொல்லிய வல்லவனான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவின் வார்த்தையை மாறாமல் கணக்கற்ற தேவர்களாகிய மலாயிக்கத்து மார்கள் ஒருங்கு சேர்ந்து சொல்லுதற் கருமையான சொர்க்க லோகத்தினது ஒளிவைக் கொண்ட இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற வீடுக ளெல்லா வற்றிலும், தளிர்களையும் பூங்கொத்துகளையு முடைய பசிய சோலைகளிலும், தெருக்களிலும், பற்பல கோடி சூரியனானவ னிருந்ததை நிகர்த்து அழகிய தீபங்களை யியற்றி வைத்தார்கள்.

 

3226. வானவர் மகளி ரெல்லா மணவினைக் கோலஞ் செய்து

     தானவன் பெயரின் வண்ணப் பயித்தொடுஞ் சலவாத் தோதிப்

     பானமுங் கனியுங் கொண்டு பன்மணி யூச லேறித்

     தீனவர்தமையும் வாழ்த்திச் செறிந்தனர் விண்ணி னம்மா.

186

      (இ-ள்) அன்றியும், தேவ மகளி ராகிய கூறுல் ஹீன்களியாவரும் அந்தச் சொர்க்க லோகத்தின் கண் விவாகச் சடங்கினது கோலங்களைப் பூண்டு தானவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் திருநாமத்தையுடைய அழகிய பைத்துக்க ளுடன் சலவாத்தையு மோதிப் பருகுவன வற்றையும் பழங்களையு முட் கொண்டு பல இரத்தினங்களைப் பதிக்கப் பெற்ற ஊஞ்சலின் மீதேறி நெருங்கி யிருந்து தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம் மார்க்கத்தை யுடையவர்களையும் ஆசீர்வதித்தார்கள்.

 

3227. மறைமொழிக் கலிமாத் தீட்டும் வாயின்மா ளிகையி னுள்ளுள்

     ளறைதொறுந் திறந்து வன்ன பேதபட் டாடை கோடி

     முறைமுறை யெடுத்துத் தேனார் முகிழ்நனை யிருந்த செவ்வி

     நறைமலர்த் தொடையும் வாய்ப்ப நன்மணிக் கரத்திற் கொண்டார்.

187