பக்கம் எண் :

சீறாப்புராணம்

125


முதற்பாகம்
 

     280. காரண மனைத்தும் வெளிப்படா தமைக்குங்

             காலமென் றறிந்துண ராம

        லூரவ ரெவர்க்கு முரைத்திவண் புகவென்

             றுளத்தினி லெண்ணிய காலைப்

        பாரிடத் தெறும்பீ றாயிப முதலாப்

             பகுத்தமைத் தவன்விதிப் படியா

        லீரமுற் றுணுங்கி நாவழங் காம

             லெழுதின மில்லம்புக் கிருந்தார்.

115

     (இ-ள்) அறிவிக்கப்படும் காரணங்களெல்லாவற்றையும் வெளிப்படா வண்ணம் உள்ளத்திலமைத்துக் கொள்ளுங் காலமிதுவென்று அப்துல்முத்தலிபவர்கள் அறிந்து தெளியாமல் ஊரிலுள்ளவர்களாகிய பந்துக்கள் யாவர்கட்குஞ் சொல்லி இங்குப் பிரவேசிக்கச் செய்வோமென்று மனத்தின்கண் நினைத்த மாத்திரத்தில், பூமியினுள் எறும்பீறாக யானை முதலாகப் பகுத்தமைத்தவனாகிய கடவுளான அல்லாகுசுபுகானகுவத்த ஆலாவினது கட்டளையின் பிரகாரம் அறிவற்று வாடிப் பேசுவதற்கு நாவானது வழங்காதபடி ஏழுநாள் வரைக்கும் வீட்டின்கண் புகுந்திருந்தார்கள்.

 

     281. சிலைநுதற் கயற்க ணாமினா வென்னுஞ்

             செவ்விபூத் திருந்தபொன் மடந்தை

        மலர்தலை யுலகிற் சுருதியை விளக்கு

             முகம்மது நபிநயி னாரை

        யிலகில கமலக் கரத்தினி லேந்தி

             யிருவிழி குளிர்தர நோக்கிப்

        பலகலை யறிவுங் கொடுப்பபோ லெழுநாட்

             பான்முலை கொடுத்தன ரன்றே.

116

     (இ-ள்) விற்போலும் புருவங்களையும் கெண்டைமீன் போலுங் கண்களையுமுடைய ஆமினாவென்று சொல்லும் அழகுபூத்திருந்த பொன் போன்ற பெண்ணானவர்கள் விரிந்த விடத்தையுடைய உலகத்தின்கண் தங்களது மகாவேதமாகிய குறுஆனை விளங்கச்செய்யும் நபிமுஹம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமென்னுந் திருநாமத்தையுடைய நபிநாயகமவர்களைப் பிரகாசியாநிற்குந் தாமரை மலர்போலுந் தங்களது கைகளினாற் றாங்கி இரண்டு கண்களும் குளிரும்படியாகப் பார்த்துப் பல கல்விகளையு மறிவையு மூட்டுவதுபோல ஏழுதினம்வரையுந் தங்களது முலைப்பாலை யூட்டினார்கள்.