முதற்பாகம்
282.
மின்னவிர் சுவன வானவர் கூண்டு
விளங்கொளி யினமணித் தசும்பி
னன்னிலைச்
சலிலங் கொணந்துகோ தறவே
நறைகமழ் முகம்மது நபியை
யிந்நிலம்
விளங்க விளக்குவ தெனவே
யெழிற்கரத் தேந்திநீ ராட்டிப்
பன்னிய
சலவாத் தோதியே வாழ்த்திப்
பரிவுடன் புகழ்ந்துபோந் திடுவார்.
117
(இ-ள்) பிரகாசமானது விரியாநிற்கும்
சுவர்க்கத்து மலக்குகள் பலர் பிரதிதினமுங் கூடிச் சொலிக்குகின்ற பிரபையினையுடைய
இரத்தினவர்க்கத்தாலான குடங்களில் நல்ல நிலமையினையுடைய சுவர்க்கத்து நதியின் தெண்ணீரை
மொண்டு கொண்டுவந்து கஸ்தூரியினது வாசனை பரிமளிக்காநின்ற சரீரத்தையுடைய நபிமுகம்மது
சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை இந்தப் பூலோகமானது விளங்கும்படி குற்றமற விளக்குவதுபோல்
அழகிய கைகளிற்றாங்கி ஸ்நானஞ் செய்வித்து சொல்லத்தக்க சலவாத்தை யோதி அன்போடு
மாசீர்வதித்துத் துதித்துப் போவார்கள்.
283.
இலங்கிலை
வேற்கை யப்துல்முத் தலிபு
மெழுதின மனையகத் திருந்து
நலங்கிளர்
நாவும் வழங்கிட மனத்தி
னால்வகைப் பயனையு முணர்ந்து
கலங்கியே
தெளிந்து மதலைமேல் விருப்பாய்க்
கடுவிழிக் கனிமொழித் துவர்வாய்ப்
பொலன்கொடி யாமி னாமணி மனையிற்
புக்கினர் புயங்கள்விம் முறவே.
118
(இ-ள்) பிரகாசிக்கின்ற இலைபோலும்
வேலாயுதம் தங்கிய கையினையுடைய அப்துல் முத்தலிபானவர்கள் ஏழுநாள் வரையும் வீட்டினகமாக
விருந்து பின்னர் நன்மைமிகுகின்ற நாவானது பேசுதற்கு வழங்க மனத்தினால் அறம் பொருள் இன்பம்
வீடு என்னும் நான்கு வகைப்பயனையு மறிந்து கலக்கமுற்றுத் தெளிந்து பிள்ளைமீது
விருப்பமாகியெழுந்து விடம்போலுங் கண்களையும், கனிபோலும் சொற்களையும், பவளம்போலும்
வாயினையு முடைய பொன்னாலாகிய கொடிபோலும் ஆமினா அவர்களினது அழகிய வீட்டின்கண்
சந்தோஷத்தால் இரண்டு புயங்களும் விம்முதற் பொருந்தவந்து பிரவேசித்தார்கள்.
|