முதற்பாகம்
284.
திண்டிறற்
பொருப்பும் பொருவரா தெழுந்து
செம்மைவீற் றிருந்தபொற் புயத்தார்
வண்டனி
குழலா ராமினா வெனும்பேர்
மடந்தைதன் றிருமுக நோக்கிக்
கண்டெனு
மொழியா யிவ்வயி னிகழ்ந்த
காரணக் காட்சிக ளெல்லாம்
விண்டெமக்
குரைரயு மென்றனர் முறுவல்
விளங்கிய குமுதவாய் திறந்தே.
119
(இ-ள்) திண்ணிய வலிமை தங்கிய
மலைகளும் நிகர் சொல்லுதற்கமையாது மீறியெழுந்து செவ்வையானது வீறுடன் குடியிராநின்ற அழகிய
புயங்களையுடையாரான அப்துல் முத்தலிபானவர்கள், வண்டுகள் பொருந்துங் கூந்தலையுடையாராகிய
ஆமினாவென்று சொல்லும் பெயரினையுடைய பெண்ணினது தெய்வத்தன்மை பொருந்திய முகாரவிந்தத்தைப்
பார்த்து கற்கண்டென்று சொல்லும்படியுள்ள சொற்களையுடையாய்! இவ்விடத்தில் நடைபெற்ற
நூதனமாகிய காட்சிகளெல்லாவற்றையும் நகைகள் விளங்கா நின்ற செவ்வல்லி மலர்போலும்
உனதுவாயினைத் திறந்து எமக்குச் சொல்லுவாயாக என்று கேட்டார்கள்.
285.
பறவைக
ளனைத்தும் வந்ததுஞ் சுவனப்
பதியைவிட் டமரர்வந் ததுவும்
மறியமு
மாசி யாவும்வந் ததுவும்
வானவர் மகளிர்வந் ததுவும்
வெறிகமழ்
பறவை வீசிநின் றதுவும்
விண்ணகத் தமுதந்தந் ததுவுங்
குறைவிலாப்
புதுமை பலவுங்கண் டதுவுங்
குறிப்புடன் படிப்படி யுரைத்தார்.
120
(இ-ள்) அவ்வாறு அப்துல் முத்தலிபவர்கள்
கேட்ட மாத்திரத்தில் ஆமினாவானவர்கள் சுவர்க்கலோகத்திலிருந்து எல்லாவிதப்பட்சி
சாதிகளும் தங்களது வீட்டிற்கு வந்ததையும், சுவர்க்கலோகத்தை விட்டு நீங்கி வானவர்கள்
வந்ததையும், மறியமலைகிஸ்ஸலாமவர்களும் ஆசியா நாயகியவர்களும் வந்ததையும், தெய்வப்
பெண்களாகிய கூறுல்லீன்கள் வந்ததையும், வாசனையானது பரிமளியாநிற்கும் பட்சியொன்று வந்து
தங்களுக்கு வீசி நின்றதையும், வானத்தின் கண்ணுள்ள தேவாமிர்தத்தைத் தங்களுக்குக்
குடிக்கும்படியாகக் கொண்டுவந்து கொடுத்ததையும், குறைவில்லாத வற்புதங்கள் பலவற்றையுங்
கண்டதையும், குறிப்போடு வகைவகையாக எடுத்துச் சொன்னார்கள்.
|