முதற்பாகம்
288.
கதம்பமான் மதம்பே ரொளிவுடன் றிகழ்ந்த
காளையைக் கரத்தெடுத் தணைத்து
மதஞ்சொரிந் தசைந்த களிரென நடந்து
வந்துகஃ பாவினை வலஞ்செய்
திதம்பெறப் போற்றி யுள்ளுறப் புகுந்தங்
கிருந்திறை தனைப்புகழ்ந் தேத்தி
விதம்பெற
முகம்ம தெனப்பெயர் தரித்து
வீறுடன் றிரும்பின ரன்றே.
123
(இ-ள்) பலவிதவாசனைப் பொடியும்
கஸ்தூரியும் பெரிய பிரகாசத்தோடு கலந்து விளங்கிய காளையாகிய நபிமுகம்மது சல்லல்லாகு
அலைகிவசல்லமவர்களை அப்துல் முத்தலிபு அவர்கள் தங்களது கைகளினாலெடுத் தணைத்துக்கொண்டு
மதத்தைச் சிந்தி யாடாநிற்கும் ஆண்யானை போல நடந்து கஃபத்துல்லாவுக்கு வந்து அதனைத்
தவ்வாபென்கிற பிரதட்சணஞ் செய்து நன்மையைப் பெறும்படியாகப் போற்றுதல் செய்து அதனுள்ளே
பொருந்தும்படி பிரவேசித்து அங்குட்கார்ந்திருந்து கடவுளாகிய அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவைப்
புகழ்ந்து துதித்து மிகுத்துரை பெறும்படி முகம்மது என்று திருநாமமுந் தரித்துப் பெருமையோடங்கிருந்து
மீண்டார்கள்.
289.
தேமலர்ப்
பொழில்சூழ் சுவனநாட் டரசைத்
திசைதொறும் விளக்குநா யகத்தை
மாமறைக்
கொழுந்தை முகம்மது நபியை
மறுப்படா தெழுந்தசெம் மணியைப்
பூமலர்க்
குழலி யாமினா வென்னும்
பூங்கொடிக் கரத்தினி லருளி
நாமவை
வேற்கை யப்துல்முத் தலிபு
நடந்துதன் றிருமனை சார்ந்தார்.
124
(இ-ள்) கஃபத்துல்லாவிலிருந்து மீண்ட
அச்சத்தையுங் கூர்மையுங்கொண்ட வேலாயுதத்தினைத் தாங்கிய கையினையுடைய அப்துல்
முத்தலிபானவர்கள், தேனைப் பொருந்திய புஷ்பங்களையுடைய சோலைசூழ்ந்த சுவர்க்கலோகத்தின்
அரசரானவர்களை, திசைகடோறுந் தங்களது மார்க்கத்தை விளங்கச் செய்யும் நாயகமானவர்களை,
மகத்தாகிய வேதங்களின் இளந்துளிரானவர்களை, குற்றப்படாதுற்பவித்த சிவந்த
மாணிக்கமானவர்களை, நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்லமவர்களை அழகிய புஷ்பங்கள் நிறைந்த
கூந்தலையுடையாராகிய ஆமினாவென்று சொலும் பூவாலான கொடி போல்வார்களது கையினிற்
கொடுத்துவிட்டு அங்கிருந்து நடந்து வந்து தங்களது சிறத்த மனையைச் சார்ந்தார்கள்.
|