முதற்பாகம்
விலாதத்துக் காண்டம்
அலிமா முலையூட்டுப் படலம்
கலிவிருத்தம்
291.
அறிவத பறமுறை பயிற்றி யுன்பட
நெறிவளர்
தரவளர்த் திடுவ நீயெமக்
குறுதியாய்
முகம்மதை யருளென் றுன்னியே
யிறையுடன்
மொழிந்தன ரமர ரியாருமே
1
(இ-ள்) நபிகணாயகம் முகம்மது முஸ்தபா
றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களுக்குத் துவைபாவென்னும் பெண்ணானவர் பாலூட்டி வளர்த்து
வருங்காலத்தில், ஒருதினம் வானவர்களாகிய மலக்குகள் அனைவரும் ஒருங்குகூடி இறைவனான அல்லாகு
சுபுகானகு வத்த ஆலாவோடும் உன்னுடைய ஹபீபாகிய முஹம்மது நபியை நீ எங்கள் பால்
ஒப்புவிப்பாயானால் நாங்கள் அவர்களுக்குப் பலவிதமான கல்விகளையும், ஒழுக்கங்களையும்,
தருமத்தினது ஒழுங்குகளையும், கற்பித்து சன்மார்க்கமானது வளரும்படிக்குக் கிருபையுடன்
வளர்த்திடுவோம், ஆகையால் உறுதியாக அவர்களை எங்களுக்குத் தருவாயாகவென்று விரைவோடுமெழுந்து
கேட்டார்கள்.
292.
நம்பெறும்
பேறெனு நபியைப் பொன்னுல
கம்பொன்னீ ராட்டிநல் லமுத மூட்டியே
யெம்பதிக்
கரசென வியற்று வோமென
வும்பர்தம்
மகளிர்க ளுவந்து கேட்டனர்.
2
(இ-ள்) அன்றியும், தேவமகளிர்களான
கூறுலீன்களனைவரும் அல்லாகு சுபுகானகுவத்த ஆலாவோடும் நாங்கள் பெறாநிற்கும் பேறென்று சொல்லும்
நபிமுகம்மது சல்லல்லாகு அலைகி வசல்லமவர்களை நீ எங்கள்பால் ஒப்புவிப்பாயானால் அவர்களை
சுவர்க்கலோகத்தின் கண்ணுள்ள அழகிய பிரகாசம் பொருந்திய நீரினால் ஸ்நானஞ் செய்வித்து
நல்ல தேவாமிர்தத்தை யுண்பித்து எங்களுடைய நகரமாகிய சுவனபதிக்கு அதிபராகச் செய்திடுவோம்
ஆகையால் அவர்களை எங்கள்பால் தருவாயாகவென்றுப் பிரியப்பட்டுக் கேட்டார்கள்.
|