இரண்டாம் பாகம்
3701.
நள்ளிருட் காலை
யாய திஃதென நடந்து சாவி
யுள்ளுறைந் துறங்கு
மொன்னார் தமைக்கடந் தொளித்தோர் பாலிற்
றள்ளரும் பலகை தாங்கிப்
பேழையிற் றடக்கை நீட்டிக்
கொள்ளருங்
காப்பு வாய்ந்த திறவுகோ லனைத்துங் கொண்டார்.
13
(இ-ள்) அவ்வாறு
நின்ற அவர்கள் இஃது அர்த்தராத்திரியாகிய சமயமாயிற்றென்று நடந்து அங்கு ஆராய்ந்து உள்ளே
தங்கி நித்திரை செய்யுஞ் சத்துராதிகளாகிய காபிர்களைத் தாண்டி ஓர்பக்கத்தில் மறைந்து தள்ளுதற்கரிய
பலகைகளினாற் செய்யப்பட்ட பூணையுடைய பெட்டியில் தங்களது பெருமை பொருந்திய கையை நீட்டிப் பெறுதற்
கருமையான கதவுகளுக்குப் பொருந்திய திறவுகோல்க ளெல்லாவற்றையுங் கொண்டார்கள்.
3702.
அவ்விட மகன்று மெல்ல வடிபெயர்த் தொதுங்கி நீங்கிக்
கௌவைக டோன்றா
நீண்ட கபாடத்தின் வாயி னண்ணிச்
செவ்விய திறவு
கோலாற் பூட்டினைத் தீண்டி நீத்து
நொவ்விதிற் றிறந்துள்
ளாய கரப்பையார் நுவல வல்லார்.
14
(இ-ள்) அவ்வாறு
கொண்டு அந்தத் தானத்தை விட்டும் நீங்கிப் பையத் தங்களது பாதங்களைப் பூமியில் நின்றும் பெயர்த்து
ஒதுங்கி விலகிச் சத்தங்கள் வெளிப்படாது நீண்ட கதவையுடைய வாயலிற் போய் நெருங்கி அழகிய
அந்தத் திறவுகோலினால் அங்கிருந்த பூட்டைத் தொட்டு நீக்கி எளிதில் திறந்து அகஞ்சென்ற
களவை சொல்ல வல்லவர்கள் யாவர்? ஒருவருமில்லர்.
3703.
செறித்த பொற்
கதவ மெல்லா மிமைப்பினிற் றிறந்து மூடிக்
குறித்தவன்
வாயில் புக்கிக் கூண்டவர் துயிற னோக்கி
யெறித்தவெண் காந்தி
மாட மெங்கணுந் திரிந்து பள்ளி
யறைத்தலந் திறந்துள்
ளாகி யடுத்தொரு புறத்தி னின்றார்.
15
(இ-ள்) அங்குச்
சேர்த்த பொன்னினாற் செய்யப்பட்ட கதவுகளெல்லாவற்றையும் அவ்வாறு கண்ணை மூடி விழிப்பதற்கு
முன்னர்த் திறந்து அடைத்து விட்டுத் தாங்கள் மனதிற் குறிப்பிட்டவனான அந்த அபீறாகென்பவனது
வாசலிற் போய்ச் சேர்ந்து அங்குக் கூடியிருந்தவர்கள் நித்திரை செய்வதைப் பார்த்து வெள்ளிய
பிரகாசத்தை வீசுகின்ற அந்த மாளிகையினது எப்பக்கத்திலுந் திரிந்து பள்ளியறையினது தானத்தைத்
திறந்து அதனுட் சென்று நெருங்கி ஒரு பக்கத்தில் நின்றார்கள்.
|