இரண்டாம் பாகம்
3704.
திரைத்துகி லடுத்தன்
னோனித் திரையினை யுணருங் காலை
விரித்தசெங் காந்திச்
செவ்வி யெரிவிளக் கவிந்த பின்னர்
வரித்தடங் கண்ணி
னாளு மன்னனும் விழிப்ப தாக
விருத்தல்கண்
டிருந்தா ராங்கோ ரிளம்புலி யிருந்த தொத்தே.
16
(இ-ள்) அவ்வாறு நின்ற அவர்கள் அங்குக்
கட்டியிருந்த திரைச் சீலையைச் சமீபித்து அந்த அபீறாபிகென்பவனது உறக்கத்தைத் தெரிந்த
சமயத்தில், செந்நிறத்தைக் கொண்ட பிரகாசத்தைப் பரப்பிய எரிகின்ற அழகிய தீபமானது அவிந்த
பிற்பாடு இரேகைகள் படர்ந்த விசாலமாகிய கண்களையுடைய அவனது நாயகியும் அரசனாகிய அவனும்
விழிப்பாக ,இருப்பதைப் பார்த்து அவ்விடத்தில் ஒப்பற்ற இளம் பிராயத்தையுடைய ஓர் புலியானது
தங்கினதைப் போன்று தங்கியிருந்தார்கள்.
3705.
இருவருந் துயிறல் கொள்ளா திருந்தன ரிருளு மாய
வுருவிவாட் டடக்கை
நீட்டி யோங்கினோ மாகி லம்ம
வரிவையோ வவனோ
வாவி யளிப்பவ ரென்ன வின்னே
தெரிவரி தென்ன
மாழ்கிச் சிந்தையிற் றேம்பி னாரால்.
17
(இ-ள்) அவ்வாறு
நின்ற அவர்கள் இந்த அபீறாகு, அவன் மனைவியாகிய இரண்டு பேரும் நித்திரை கொள்ளாமலிருக்கின்றார்கள்.
இங்கு இருட்டுமாயிற்று. நாம் நமது வாளாயுதத்தை உறையை விட்டும் உருவிப் பெருமை பொருந்திய கையை
நீட்டி யோங்கி வெட்டுவோமேயானால் தனது பிராணனைக் கொடுப்பவர் அந்தப் பெண்ணோ? அல்லது அந்த
அபீறாபிகென்பவனோ? என்று சொல்லி இத்தன்மையாகத் தெரிவதற்கியலாதென்று மயங்கி மனதில் மெலிவடைந்தார்கள்.
3706.
கங்குலி னெதிர்ந்து
தாவும் போதினிற் கடிதி னாவி
மங்கையே வழங்கி
னாளேல் மாநில முழுதுங் கொள்ளாப்
பங்கமும் பவமுந்
தூறும் பழியும்வந் தடையு மென்ன
வங்கையிற் பிடித்த
வாளை யணிநிலஞ் சேர்த்தி னரால்.
18
(இ-ள்) அவ்வாறு
தளர்வடைந்த அவர்கள் இந்த இருளில் நாம் எதிர்த்துப் பாயுஞ் சமயத்தில், விரைவில் தனது
பிராணனை அந்தப் பெண்ணே கொடுப்பாளானால் பெருமை பொருந்திய இப்பூலோக முழுவதுங் கொள்ளாத
ஈனமும், பாவமும், நிந்தையும், குற்றமும் வந்து நம்மைச் சேருமென்று அழகிய கையிற் பற்றிய
வாளாயுதத்தைப் பெருமை தங்கிய பூமியிற் பொருத்தினார்கள்.
|