பக்கம் எண் :

சீறாப்புராணம்

1357


இரண்டாம் பாகம்
 

3707. கொல்வதற் கிசைந்து நின்றேங் காலையுங் குறுகிப் போய

     மல்வளர் புயத்தி னானு மங்கையுந் தெரித றோன்றா

     வில்விடுத் தகன்று சார்பி னெய்தியங் குறைந்து நாளைச்

     செல்வதெவ் வண்ண மென்ன வடிக்கடி தெருமந் தாரால்.

19

     (இ-ள்) அவ்வாறு பொருந்திய அவர்கள் நாம் இந்த அபீறாபி கென்பவனைக் கொலை செய்வதற்கு உடன்பட்டு இங்கு வந்து நின்றோம். நேரமுங் குறுகிப் போயிற்று. இனி நாம் வலிமையானது ஓங்கப் பெற்ற தோள்களையுடைய அவனும் அவனது மனைவியாகிய அப்பெண்ணும் தெரிவதற்கு விளங்காமல் இவ் வீட்டை விட்டு விலகி நமது உறைவிடத்திற் போய்ச் சேர்ந்து அங்குத் தங்கியிருந்து நாளையத் தினம் இங்கு வருவது எவ்விதமென்று அடிக்கடி மயக்கமுற்றிருந்தார்கள்.

 

3708. கொற்றவ னாவி போவ தன்றிவை குறித்து நோக்கி

     நிற்றனம் மாவி யென்ன விடைந்திடைந் தெண்ணுங் காலைக்

     கற்றையங் கரிய கூந்தற் கன்னியை விளித்து மன்ன

     னுற்றறி யென்பான் போலச் சிலமொழி யுரைப்ப தானான்.

20

      (இ-ள்) அவ்விதமிருந்த அவர்கள் அரசனான அந்த அபீறாபிகென்பவனது பிராணன் போவதல்லாமல் நமது பிராணன் இவற்றைக் குறிப்பிட்டுப் பார்த்து நிற்கின்ற தென்று மிகவு மிடைந்து ஆலோசிக்குஞ் சமயத்தில், அந்த அரசனானவன் மயிர்த் தொகுதியையுடைய கருநிறத்தைக் கொண்ட அழகிய கூந்தலைப் பெற்ற அப்பெண்னைக் கூப்பிட்டு ஆராய்ந்தறியென்று சொல்பவனைப் போலச் சில வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கினான்.
 

3709. பன்மணிக் கலன்கள் பூண்டு பரிமளந் திமிர்ந்து வாசச்

     சின்மலர் செருகுங் கூந்தற் சேயிழை  யொருத்தி யொன்பாற்

     பின்முகந் திரும்பி யேறா மொழிபல பிதற்றிப் பேசி

     வன்மமுற் றிருப்பக் கண்டேன் கனவென வழங்கி னானால்.

21

     (இ-ள்) பல இரத்தினங்களைப் பதித்த ஆபரணங்களைத் தரித்து வாசனைத் திரவியங்களைப் பூசிப் பரிமளத்தைக் கொண்ட சில புஷ்பங்களைச் சொருகுகின்ற கூந்தலையுடைய ஒரு பெண்ணானவள் என்னிடத்தில் தன் முகத்தைப் பிற்பக்கத்தில் திருப்பிக் கொண்டு தகாத பல வார்த்தைகளைப் பலகாற் சொல்லி பேசி வைராக்கிய முற்றிருக்க ஓர் கனவு கண்டேனென்று சொன்னான்.