பக்கம் எண் :

சீறாப்புராணம்

1358


இரண்டாம் பாகம்
 

3710.  கூறிய மொழியைக் கேட்டுக் கொவ்வைங் கனிவாய்ப் பேதை

     வேறொரு மாதை யுள்ளம் விரும்பினை யதனா லிந்தப்

     பேறுடன் கனவு காணப் பெற்றனை யென்ன வூடிச்

     சீறிய வெகுளி பொங்க விருவிழி சிவந்து நின்றாள்.

22

      (இ.ள்) அவன் அவ்வாறு சொல்லிய வார்த்தைகளைக் கொவ்வைக் கனியை நிகர்த்த வாயையுடைய அந்தப் பெண்ணானவள் கேள்வியுற்று நீ உனது இதயத்தின்கண் வேறொரு பெண்ணை இச்சித்தாய், அவ்விச்சையினால் இந்த வாய்ப்போடுங் கனவு காணப் பெற்றாயென்று சொல்லிப் பிரியவீனப்பட்டு அதட்டிய கோபமானது அதிகரிக்கும் வண்ணம் இரண்டு கண்களும் செந்நிறமடைந்து நின்றாள்.

 

3711. அறக்கடிந் துரைப்பக் கேட்ட வாடவ னவளை நோக்கிப்

     பெறற்கரும் பெண்மை நல்லாய் பிறிதொரு மாதை யாவி

     யிறக்கினு மிறப்ப தல்லா னினைத்தில னெளியே னென்னத்

     திறக்கரும் வெகுளி மாற வூடலைத் திருத்தி னானால்.

23

      (இ-ள்) அவ்வாறு மிகவும் கோபித்துப் பேசக் கேள்வியுற்ற அந்த அபீறாபிகென்பவன் அந்தப் பெண்ணைப் பார்த்து அடைதற் கருமையான பெண் தன்மையையுடைய மாதே! எனது பிராணன் மடிந்தாலும் மடிவதல்லாமல் வேறொரு பெண்ணை எளியேனாகிய யான் சிந்திக்கே னென்று நீக்குதற்கரிய அவளது கோபமானது ஒழியும் வண்ணம் ஊடலின் நின்றும் அவள் மனதைச் செவ்வைப் படுத்தினான்.

 

3712. ஊடலைத் திருத்தி யன்னோ னுரைத்திடுந் தொனியும் வாய்ந்த

     பேடைமா மயிலன் னாள்வாய்ப் பிறந்தசொற் றொனியு நீங்கிக்

     கூடுறா திருக்குந் தானக் குறிப்பினை யுணர்த்தக் கேட்டுப்

     பீடுற நலிதல் போக்கி மனத்தினிற் பிரிய முற்றார்.

24

      (இ-ள்) அந்த அபீறாபிகென்பவன் ஊடலில் நின்றும் அவள் மனத்தைச் செவ்வைப் படுத்திக் கூறுகின்ற ஓசையும், சிறந்த பெருமை பொருந்திய பெண்மயிலை நிகர்த்தவளான அந்தப் பெண்ணினது வாயிலிருந் துண்டாகிய வார்த்தைகளினது ஓசையும், அவர்கள் விலகிச் சேராமலிருக்கின்ற தானத்தினது அடையாளத்தைத் தெரிவிக்க, அதை அந்த அப்துல்லா றலியல்லாகு அன்கு அவர்கள் கேள்வியுற்றுத் தங்களது வாட்டத்தை யொழித்துப் பெருமையுறும் வண்ணம் இதயத்தின் கண் உவகையுற்றார்கள்.