பக்கம் எண் :

சீறாப்புராணம்

1360


இரண்டாம் பாகம்
 

3716. மறந்தருங் கொடிய வஞ்ச மனத்தபீ றாபி கின்னே

     யிறந்தன னுயிர்பெற் றானென் றிரண்டிலொன் றறிவோ மென்னத்

     திறந்தரு மப்துல் லாவென் றோதிய திருப்பேர் மன்னர்

     நிறந்தரந் தெரியாக் கங்கு னின்றன ரொருபா லன்றே.

28

      (இ-ள்) அவ்வாறகன்ற வலிமையைத் தருகின்ற அப்துல்லா றலி யல்லாகு அன்கு என்று கூறிய அழகிய நாமத்தையுடைய அரசரானவர் நிறமுந் தசமுந் தோற்றாத அந்த இராக்காலத்தில் குற்றத்தைத் தருகின்ற கொடிய மாயத்தைக் கொண்ட இதயத்தையுடைய அந்த அபீறாபிகென்பவன் இப்பொழுதே மாண்டான். அல்லது மாண்டிலனென்று இரண்டிலொன்றை யுணருவோமென்று சொல்லி ஒரு பக்கத்தில் நின்றார்கள்.

 

3717. இருந்தன ரெவர்கொ லென்பா ரியாவரிற் புகுந்தா ரென்பார்

     தெரிந்திலன் காணு மென்பார் தீபமு மிலையோ வென்பார்

     கரந்தவ ருளரோ வென்பா ரொருவருங் காணோ மென்பார்

     சொரிந்தது குருதி யென்பார் சோர்ந்தனன் மன்ன னென்பார்.

29

      (இ-ள்) அவ்வாறு நிற்க, அங்கு வந்து கூடியவர்கள் இங்கு இருந்தவர்கள் யாவரென்று கேட்பார்கள். இவ்வீட்டில் யார் வந்து நுழைந்தாரென்று கேட்பார்கள். அதற்குச் சிலர் யாங்களறிந்திலோ மென்று சொல்லுவார்கள். இங்கு விளக்கும் இல்லையா? என்று கேட்பார்கள். மறைந்தவர்கள் இங்கு இருக்கின்றார்களா? என்று கேட்பார்கள். அதற்கு ஒருவரையுங் காணவில்லையென்று சொல்லுவார்கள். இரத்தஞ் சிந்திற்றென்று சொல்லுவார்கள். அரசன் தளர்ந்து விட்டானென்று சொல்லுவார்கள்.

 

3718. உண்டிலை யாவி யென்பா ருயிர்துடிக் கின்ற தென்பார்

     விண்டனன் மாற்ற மென்பார் விழித்தனன் காணு மென்பார்

     கண்டவ ருளரோ வென்பார் காயத்திற் பழைப்பி லென்பார்

     மண்டலம் புகழும் வேந்தே மாயமோ விளைந்த தென்பார்.

30

      (இ-ள்) உயிர் இருக்கிறது, இல்லையென்று சொல்லுவார்கள். பிராணன்  துடிக்கிறதென்று சொல்லுவார்கள். சமாச்சாரம் பேசுகின்றானென்று சொல்லுவார்கள். கண்களைத் திறந்தானென்று சொல்லுவார்கள். அதைப் பார்த்தவர்களுளரா? என்று கேட்பார்கள். தேகத்திற் பிழைப்பில்லை யென்று சொல்லுவார்கள். இப்பூலோகமானது துதிக்கின்ற அரசனே! உனக்கு இங்கு மாயமா? உண்டாயிற்றென்று சொல்லுவார்கள்.