பக்கம் எண் :

சீறாப்புராணம்

1361


இரண்டாம் பாகம்
 

3719. என்னினிச் செய்வோ மென்பா ரிடைந்திடைந் தேங்கி நிற்பார்

     பன்னுவ தென்கொ லென்பார் பழிமுடித் தவரா ரென்பார்

     முன்னையூழ் விதிகொ லென்பார் முனையகத் திறந்தி டாது

     மன்னவ னாவி வீணில் வழங்கினான் காணு மென்பார்.

31

     (இ-ள்) யாம் இனி யாதுசெய்வோமென்று சொல்லுவார்கள். மிகவும் இடைந்து அழுது நிற்பார்கள். நாம் சொல்லுவதென்னையென்று சொல்லுவார்கள். இந்தப் பழியை நிறைவேற்றினவர் யாவரென்று கேட்பார்கள். ஆதியிலுள்ள பிராரத்துவ விதியென்று சொல்லுவார்கள். இந்த மன்னன் யுத்தகளத்தில் மாளாது வீணில் தனது பிராணனைக் கொடுத்தானென்று சொல்லுவார்கள்.

 

3720. மடிந்தன னென்னு மாற்றம் வழங்கிடக் கடலி னாப்பண்

     படர்ந்தவெண் டிரையிற் றத்திப் பன்மணி நிதியத் தோடு

     முடைந்திடுங் கலம தொப்ப மன்னவன் மனையு ளெங்கு

     மிடைந்திடைந் திரங்கி யேங்கி யெழுந்துகொல் லென்ற தன்றே.

32

      (இ-ள்) அவ்வாறு அரசன் மாண்டானென்னும் வார்த்தையைச் சொல்ல, அவ்வரசனது வீட்டினுள் எவ்விடத்திலுமிருந்தவர்கள் சமுத்திரத்தினது மத்தியிற் பரவிய வெள்ளிய அலைகளிற் பாய்ந்து பல இரத்தினத் திரவியத்தோடுந் தகர்ந்த கப்பலை யொப்பாக மிகவு மிடைந்து உருகி அழுது கொல்லென்றொலித்து எழுந்தார்கள்.

 

3721. மாற்றல னிறந்தா னென்ன மனமகிழ்ந் துவகை பொங்கிப்

     போற்றிநந் நபியை வாழ்த்தி யப்துல்லா பூரிப் போடுந்

     தோற்றிடா தொதுங்கி வாய றொறுங்கடந் தெளிதி னேகித்

     தீற்றிவெண் ணிலவு காலும் புரிசையின்  வாயிற் சேர்ந்தார்.

33

     (இ-ள்) அவ்வாறெழும்ப, அப்துல்லா றலியல்லாகு அன்கு அவர்கள் சத்துராதியாகிய 

அந்த அபீறாபிகென்பவன் மாண்டானென்று சொல்லி மனக் களிப்படைந்து உவகையானது அதிகரிக்கப் பெற்றுப் பூரிப்புடன் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களைப் போற்றிப் புகழ்ந்து பிறரொருவருக்குந் தெரியாமற் பதுங்கி வாயல்களெல்லாவற்றையும் இலகுவில் தாண்டிச் சென்று சுண்ணச்சாந்தைப் பூசி வெள்ளிய பிரகாசத்தை வீசுகின்ற கோட்டைவாயிலிற் போய்ச் சேர்ந்தார்கள்.

 

3722. புரிசையின் வாயி லாலும் பொதி யிருட் காலையாலும்

     வரிமுறைப் படியிற் காலை வைத்திடத் தவறி வீழ்ந்து

     தரிபடற் கரிதா யோர்தா ளொடிந்ததத் தாளி னோடும்

     விரைவொடு மெழுந்து சாரும் விடுதியை நண்ணி னாரால்.

34