இரண்டாம் பாகம்
இஞ்சீல், சபூறு,
புறுக்கானென்னும் நான்கு வேதங்களுக்கும் நாயகராகிய நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல்
சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது திருவடிகளை நெருங்கித் தாங்கள் போய்ச் சேர்ந்த அந்தக்
கைபறென்னுந் தானத்தில் தங்கிய சமாச்சாரங்க ளெல்லாவற்றையுஞ் சொல்லித் தங்களது காலில்
தடைபட்டு முறிந்த வரலாற்றையுங் கூறினார்கள்.
3726.
கொடியவஞ் சகத்தைச்
சூழ்ந்த குணத்தபீ றாபி காவி
முடிவினைக் கேட்டு
தீனின் முரட்பகை தவிர்ந்த தென்ன
நெடியவ னிறசூ
லுல்லா நேரலர்க் கரியே றன்னா
ரொடிபடுந் தாளை
நோக்கி யோதிச்செங் கரத்திற் றொட்டார்.
38
(இ-ள்) நெடியவனான
அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் றசூலாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் பொல்லாங்கையுடைய வஞ்சகத்தை வளையப் பெற்ற குணத்தைக் கொண்ட அந்த
அபீறாபி கென்பவனது பிராணத்தின் அந்தத்தைக் கேள்வியுற்றுத் தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம்
மார்க்கத்தின் வலிமையைக் கொண்ட விரோதமானது ஒழிந்ததென்று சத்துராதிகளாகிய யானைகளுக்குச்
சிங்கத்தை நிகர்த்த அந்த அப்துல்லா றலியல்லாகு அன்கு அவர்களது முறிந்த காலைப் பார்த்து
வாயினால் வேத வசனங்களை யோதிச் செந்நிறத்தையுடைய தங்கள் கையினால் தீண்டினார்கள்.
3727.
என்பற முறிந்து தோலு
மிழந்தொரு நரம்பிற் றூங்கித்
துன்புறுந் தாளி
னீண்ட திருக்கரந் தொட்டு நீவ
வன்புறப் பொருந்திக்
காய மென்பதோர் வடுவு மின்றி
முன்பிருந் ததனிற்
செவ்வி மும்மடங் காயிற் றன்றே.
39
(இ-ள்) எலும்பான தறும் வண்ணம் ஒடிந்து தோலுமின்றி
ஒற்றை நரம்பில் தொங்கி வருத்தத்தைப் பொருந்திய அந்தக் காலில் அவ்வாறு அவர்கள் தங்களது
நீட்சியைக் கொண்ட அழகிய கையினால் தீண்டித் தடவ, அந்தக் காலானது வலிமையுறும்படி சேர்ந்து
காயமென்று சொல்லுவதான ஓர் குற்றமு மில்லாமல் ஆதியிலிருந்ததைப் பார்க்கினும் அழகானது மூன்று
பங்கு அதிகமாயிற்று.
3728.
கடங்கரைத் திறைக்கும்
வெற்றிக் களிறெனு மப்துல் லாவை
யிடம்பெற விருத்திச்
செய்யும் வரிசைக ளனைத்து மீந்து
தடங்கடற் புடவி
காத்துத் தரியலர்க் கரியே றென்ன
மடங்கலா சனத்தின்
வைகி முகம்மதாண் டிருந்தா ரன்றே.
40
|