முதற்பாகம்
309.
மக்கமா
நகரெனும் வரிசை யூரதிற்
புக்கியே
பிழைப்பது பொருட்டென் றெண்ணியே
மிக்கபே
ரனைவரும் விளம்பிக் காலமே
தக்கநற்
பயணமென் றெடுத்துச் சாற்றினார்.
19
(இ-ள்) அவ்வாறு பேசிய மிகுதியான
ஜனங்களெல்லோரும் மக்கமா நகரமென்று சொல்லாநிற்கும் சங்கைபொருந்திய வூரின்கண் சென்று
ஜீவிப்பதே மேம்பாடு என்றாலோசித்து அதையாவர்களும் அறியும்படி சொல்லிக்காட்டி நாளைய தினம்
அருணோதய சமயத்தில் அவ்வூருக்குத் தகுதியாகிய நல்ல பிரயாணமென்று எடுத்துச் சொன்னார்கள்.
310.
ஆரிது
மனையலி மாகண் டுஞ்சிட
வேரிய
மடிமிசை விருக்க மொன்றதிற்
றூரிலை
பணரெலாங் கனிக டூங்கிடச்
சீர்பெறு
நறைக்கனி யமுதஞ் சிந்தவே.
20
(இ-ள்) அன்றிரவு, அந்தக் குனையின்
நகரத்திலுள்ள ஆரிதென்பவர்களின் மனைவியாகிய அலிமாவானவர் படுத்து நித்திரை செய்ய அவரின்
வாசனை பொருந்திய அழகிய மடியின் மீது ஒரு விருட்சமானது நிற்கவும், அதின் மூடு இலை கிளை முதலிய
எல்லாவற்றிலும் பழங்கள் தொங்கவும், சிறப்புத் தங்கிய பரிமளத்தையுடைய அப்பழங்கள்
அமுதத்தைச் சிந்தவும்.
311.
மரகத
நிறமர மடியிற் றோன்றியே
சொரிகதிர்க் கனியெலாந் துய்ப்பச் செங்கயல்
வரிவிழி
மயிலலி மாக னாவினைத்
தெரிதரக்
கண்டெழுந் தெவர்க்குஞ் செப்பினார்.
21
(இ-ள்) மரகத நிறமமைந்த அந்த மரமானது
மடியின்கண் விளங்கிச் சொரியா நிற்கும் பிரகாசத்தையுடைய பழங்களெல்லாவற்றையும்
புசிக்கவுமான வொருசொப்பனத்தைச் சிவந்த கெண்டைமீன்போலும் இரேகைகள் படர்ந்த கண்களையுடைய
மயிலாகிய அவ்வலிமாவானவர் தோற்றும்படி பார்த்து எழும்பி யாவர்களுக்கும் சொன்னார்.
312.
அறிவுறு
துவைபெனுந் தந்தை யாகிய
மறையவன்
கேட்டுத்தன் மகவை நோக்கிநன்
னெறிதிகழ்
மக்கமா நகரி னீர்செலின்
பெறுபல
னுறுதியுண் டென்னப் பேசினான்.
22
(இ-ள்) அறிவால் மிகுந்த துவைபென்று
சொல்லும் அலிமாவினது பிதாவாகிய வேதியன் அச்சமாச்சாரத்தைக் காதினாற் கேள்வியுற்றுத் தனது
புதல்வியாகிய அலிமாவைப் பார்த்து நல்ல
|