பக்கம் எண் :

சீறாப்புராணம்

1380


இரண்டாம் பாகம்
 

புத்தியில்லாது இங்குத் தங்கியிருந்தோம். அந்த முகம்மதென்பவனுக்கு இப்பூமியின்கண் மந்திரச் செய்கை யொன்றேயல்லாமல் வெல்லுகின்ற எந்தத் தன்மை யிருந்தது? ஒன்றுமில்லை.

 

3766. மதுகை மன்னவர் பதுறிலென் பொருட்டினின் மாண்டா

     ரெதிரும் வன்பழி சுமப்பதுந் துடைப்பது மியானே

     புதல்வர்க் குமுயிர்த் துணைவர்க்குந் தேடிய பொருட்கும்

     பதியின் மன்னர்க்கு மென்னெனத் துணிவொடும் பகர்ந்தான்.

7

      (இ-ள்) அன்றியும் பதுறென்னுன் தானத்தில் வலிமையையுடைய அரசர்கள் எனது காரணத்தால் மடிந்தார்கள், எதிர்க்கின்ற கொடிய பழியைத் தாங்குவதும் அதை யில்லாமற் செய்வதும் யான்றான்.  ஆதலால் அவர்களது புத்திரர்களுக்கும் பிராணனை நிகர்த்த சகோதரர்களுக்கும், அவர்கள் சம்பாதித்த பொருட்களுக்கும், இந்தத் திருமக்கமா நகரத்திலுள்ள அரசர்களுக்கு மென்ன? ஒன்றுமில்லை யென்று திடத்தோடுஞ் சொன்னான்.

 

3767. கரைத்த மும்மதக் களிறெனும் கறுபருள் புதல்வ

     னுரைத்த வாசகங் கேட்டலு மபூசக லுதவுங்

     கிரித்த டப்புயன் வீரத்தின் மறுவிலிக் கிரிமா

     பரித்த சொல்லினைப் பகர்ந்தனை யெனப்பக ருவனால்.

8

      (இ-ள்) கன்னமதம், கைமதம், கோசமதமென்னு மூன்று மதங்களையுங் கரைக்கின்ற யானையென்று சொல்லும் ஹறுபென்பவன் இவ்வுலகத்தில் தந்த புத்திரனாகிய அபாசுபியானென்பவன் அவ்வாறு கூறிய வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில், அபூஜகிலென்பவன் தந்த மலையை நிகர்த்த பெரிய தோள்களையுடையவனான வீரத்தினால் ஒப்பில்லாத இக்கிரிமாவென்பவன் நீ அன்பைக் கொண்ட வார்த்தைகளைக் கூறினாயென்று சொல்லுவான்.

 

3768. தந்தை யர்க்குறு முறவினர்க் கொருதவ றடுக்கி

     னந்த வேளையி னுயிரையு மளித்திட லழகாற்

     றந்தை தன்பழி கொளற்கிசை யாதவன் றனையு

     மந்த மன்மக னென்பது மிதுவுமோ ரழகால்.

9

     (இ-ள்)  தனது பிதாவினுக்கும் பொருந்திய பந்துக்களுக்கு ஓர் குற்றமானது வந்து சேருமேயானால் அந்தச் சமயத்தில், தனது பிராணனையுங் கொடுப்பது ஒழுங்கு, தனது பிதாவினது பழியை வாங்குவதற்கு உடன்படாதவனையும் அந்த அரசனான பிதாவினது மகனென்று சொல்லுவதும் இதுவுமோ ரொழுங்குதான்.