பக்கம் எண் :

சீறாப்புராணம்

1386


இரண்டாம் பாகம்
 

மேகத்தின் மின்னலென்று சொல்லும் பிரகாசத்தைக் கொண்ட வேலாயுதத்தையுடைய அபாசுபியா னென்பவன் மகிழ்ந்து தனது ஊரின் பக்கத்தில் சூழ்ந்த சிற்றூர்களிலுள்ள பெரிய சைனியங்களை ஒன்று சேர்த்து அழகைப் பொருந்திய குதிரைகளோடுங் கூட்டமிட்டான்.

 

3786. வருக னானத்துக் கூட்டமும் வளைந்தவா ருதியைப்

     பருகுங் கார்க்குல மெனவரு மபசிவெம் படையும்

     பிரிவி லாப்புற நகர்ப்பெரும் படைகளும் பெருகி

     யரிய மானக ரிடனற மலிந்தன வன்றே.

27

      (இ-ள்) அவ்வாறு கூட்டமிட, அங்கு வந்த கனானத்தென்னுங் கூட்டத்தினது சேனையும், பூமியைச் சூழ்ந்த சமுத்திரத்தை யருந்துகின்ற மேகக் கூட்டங்களைப் போன்று  வந்த வெவ்விய ஹபஷிச் சேனையும், நீங்காத பக்கத்திலுள்ள ஊர்களினது பெரிய சேனைகளும், அதிகரித்து அருமையான பெருமையையுடைய அந்தத் திருமக்கமாநகரத்தில் இடமில்லாமல் நிறைவுற்றன.

 

3787. மறந்த ருங்கதிர் வேலொடுங் களத்திடை பதுறி

     லிறந்த மன்னவர் மைந்தருங் கேளிரென் பவருங்

     குறைந்தி டாப்பெருங் குறைசியங் காபிரின் குலமு

     மறந்த ராமனத் தொடுஞ்சமர்க் கோலங்க ளானார்.

28

     (இ-ள்) அவ்வாறு நிறையக் கொலையைத் தருகின்ற பிரகாசந் தங்கிய வேலாயுதத்தோடும் பதுறென்னுந் தானத்திலுள்ள யுத்தக்களத்தின்கண் மாண்ட அரசர்களது புத்திரர்களும் சுற்றத்தார்களென்று சொல்லப்பட்டவரும், குறையாத குறைஷிக் காபிர்களது பெரிய கூட்டமும், புண்ணியத்தைக் கொடாத இதயத்தோடும் யுத்தக் கோலங்களைப் பூண்டார்கள்.

 

3788. சுரிந்த பங்கியர் சேந்தகண் ணினர்மலைத் துளையின்

     விரிந்த வாயினர் வெள்ளெயிற் றினரிருள் விடத்தின்

     கரிந்த மெய்யினர் திரட்டுணைத் தாளினர் கபடம்

     பொருந்து நெஞ்சின ரிரக்கமெள் ளளவினும் பொருந்தார்.

29

      (இ-ள்) அவ்வாறு பூண்ட, சுருங்கிய முடிகளையுடையவர்களும், செந்நிறத்தைக் கொண்ட விழிகளை யுடையவர்களும், மலைகளினது துவாரத்தைப் போலும் விரிந்த வாயையுடையவர்களும், வெள்ளிய பற்களை யுடையவர்களும், அந்தகாரத்தை நிகர்த்த விஷத்தைப் போலுங் கரிந்த தேகத்தையுடையவர்களும், திரட்சியைக் கொண்ட இருகால்களையுடையவர்களும், வஞ்சகம் பொருந்திய மனத்தையுடையவர்களும், எட்பிரமாணமாயினும் கிருபையில்லாதவர்களும்.