முதற்பாகம்
இ-ள்) அவ்வாறு ஆங்கு
போய்ச் சேர்ந்த இளஞ்சந்திரனைப் போன்ற நெற்றியையும் கரிய கூந்தலையுமுடைய அந்தப்
பெண்களனைவரும் நாங்கள் கூலிக்காகக் குறைவில்லாது மென்மை பொருந்திய முலைப்பால் கொடுத்துக்
குற்றமறும்படி பேணி வளர்த்திடுவோம். ஆகையால் சிறுவர்களுண்டுமா! வென்று சிறுவர்களுள்ள வீடுகள்
முழுவதிலும் போய் விசாரித்தார்கள்.
317.
கூலியின்
முலையமு தூட்டுங் கோதையர்
நாலொரு
பதின்மர்வந் தவரு நன்குறப்
பாலகர்
பெற்றுறு பலனும் பெற்றனர்
சாலவெம்
பசிப்பிணி தவர்ந்திட் டாரரோ.
27
(இ-ள்) அவ்விதம் விசாரிக்கவே,
கூலிக்காக முலைப்பால் கொடுக்கும் பெண்கள் ஹலிமாவோடு நாற்பது பேர்கள் ஆங்கு வந்ததில்
ஹலிமா நீங்கலாக மற்ற முப்பத்தொன்பது பேர்களும் நன்மையுறும்படி சிறுவர்கள் கிடைக்கப்பெற்று
பொருந்திய இலாபத்தையும் அடைந்தார்கள். மிகுதியான கொடிய பசியென்னும் நோயும்
நீங்கினார்கள்.
318.
ஆயிழை
யெனுமலி மாவு மாரிதுந்
தூயநற்
றெருவெலாந் திரிந்து சோர்ந்தொரு
சேய்கிடைத் திலையெனத் திகைத்து வாடியே
வாயுரை மறந்தற மதிம யங்கினார்.
28
(இ-ள்) ஆராய்ந் தெடுத்த ஆபரணங்களை
யுடையாளென்னும் ஹலிமாவும் ஹாரிதென்பவரும் அந்த மக்கமா நகரத்திலுள்ள பரிசுத்தமான நன்மை
பொருந்திய வீதிகள் முழுவதும் அலைந்து தளர்ச்சி கொண்டு மற்றவர்களைப் போலக் கூலிப்பால்
கொடுக்கும்படி நமக்கொரு பிள்ளை கிடைக்கவில்லையே இதன் காரணமென்னவென்று பிரமித்து
வாட்டமுற்று வாயினது வார்த்தைகளையும் மறந்து தங்களது முழுமையான அறிவு மயங்கினார்கள்.
319.
உடற்பருத்
திலவொரு முலையுஞ் சூகையிம்
மடக்கொடிக் கெனமறுத் தாரென் றெண்ணியே
தடப்புய
னப்துல்முத் தலிபு தன்மனை
யிடத்தினில் வந்துநின் றிசைத்திட் டார்களே.
29
(இ-ள்) அவ்வித மயங்கிய இருவர்களும்
இந்த இளங்கொடி போல்வராகிய ஹலிமாவுக்குச் சரீரமானது பருத்திலது ஒரு தனமும் சூகையென்று
சொல்லி நம்மிடத்தில் பாலருந்தும்படி பிள்ளைகளைத் தராமல் இவ்வூரார் மறுத்தார்களென்று
நினைத்துப் பெருமை பொருந்திய புயங்களையுடைய அப்துல்
|