பக்கம் எண் :

சீறாப்புராணம்

140


முதற்பாகம்
 

முத்தலிபென்பவரது வீட்டின் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு ஒருவரோடொருவர் பேசினார்கள்.

 

  320. தரைப்பெரும் புகழெலாந் தரித்து மாமணி

       நிரைத்தணி குங்கும மாலை நீங்கிலா

       வரைப்புய அப்துல்முத் தலிபு வந்துநின்

       றுரைத்தவ ரிருவரை யுற்று நோக்கினார்.

30

     (இ-ள்) அப்போது பூமியின்கண்ணுள்ள பெரிய கீர்த்தி முழுவதையும் தரிக்கப்பெற்று பெருமை தங்கிய நவரத்தினங்களை வரிசையாக நிரைக்கப்பட்ட மாலையும் குங்குமப் புஷ்பத்தினாற் செய்யப்பட்ட மாலையும் மாறாது குடியிருக்கும்படியான மலைபோலும் புயங்களையுடைய அப்துல் முத்தலிபவர்கள் வந்து வீட்டின் பக்கத்தில் நின்றுகொண்டு பேசிய ஆரிதையும் ஹலிமாவையும் உற்றுப் பார்த்தார்கள்.

 

     321. உடலுலர்ந் தொடுங்கியோர் முலையுஞ் சூகைகொண்

        மடமயில் கூலிப்பால் வழங்கு வோமெனத்

        திடமுற விசைத்தன டெரியுங் காரணங்

        கடவுளின் பயனெனக் கருத்தி லெண்ணினார்.

31

     (இ-ள்) அவ்விதம் பார்த்த அப்துல் முத்தலிபவர்கள் சரீரமானது மெலிந்து ஒடுக்கமுற்று ஒரு ஸ்தனமும் சூகை கொண்ட இளமயிலாகிய இந்தப் பெண் கூலிப்பால் கொடுப்போமென்று உறுதியாகச் சொல்லினாள். அதனால் வெளியாகும் காரணம் கடவுளினது பயனாயிருக்குமென்று மனசின்கண் நினைத்தார்கள்.

 

     322. கோதைநின் குலம்பெய ரேது கூறென

        மாதவ னுரைத்தலு மடந்தை பண்புறச்

        சாதெனுங் குலத்தினென் றாயுந் தந்தையு

        மோதுமென் பெயரலி மாவென் றோதினாள்.

32

     (இ-ள்) அவ்வாறு நினைத்த மகாதவத்தையுடைய அப்துல் முத்தலிபானவர்கள் ஹலிமாவை நோக்கி பெண்ணே! உன்னுடைய குலம் யாது! உனது பெயரென்ன! சொல்லுவாயாகவென்று கூறியவுடன் ஹலிமா சாதென்று சொல்லும் குலத்திலுள்ள என்னுடைய தாயுந் தகப்பனும் எனக்கு இட்ட எனது பெயர் ஹலிமாவென்று தகுதியுறும்படி சொன்னார்கள்.

 

     323. குலத்துடன் பெயரையுங் கூறக் கொற்றவ

        னலத்துடன் செல்வமும் பொறையு நன்கெனப்

        பெலத்தது பொருளென வெண்ணிப் பேதியாச்

        சிலைத்தடம் புயன்பல தெரிந்து கூறுவான்.

33