பக்கம் எண் :

சீறாப்புராணம்

1390


இரண்டாம் பாகம்
 

கோபித்து எல்லாவற்றையும் கையினால் தடை செய்தவற்றை நிகர்த்தன.

 

3799. வேத நாயக முகம்மதின் தீனிலை விரும்பாப்

     பாத கக்குபி ரவருடற் பாழ்ங்குழி படுத்தப்

     பூத லத்தினில் வம்மின்க ளெனத்தனி புழுங்கி

     யாதி வானவர்க் குரைத்தென முரசங்க ளதிர்ந்த.

40

     (இ-ள்) அன்றியும், முரசுகள் வேதங்களுக்கெல்லாம் நாயகமான நபிகட்பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க நிலைமையைப் பிரியப்படாத துரோகத்தையுடைய காபிர்களது தேகத்தைப் பாழான நரகக் குண்டத்திற் படுத்தும் வண்ணம் நீங்கள் இப்பூமியினிடத்தில் வாருங்களென்று உட்டணித்து அற்புதத்தைக் கொண்ட தேவர்களாகிய மலாயிக்கத்துமார்களுக்கு ஒப்பறக் கூறியதைப் போன்று முழங்கின.

 

3800. பரவை மாநிலஞ் சுமந்தவெம் பரிகளைப் பரிகள்

     விரைவின் வேகத்திற் சுமந்தன வேந்தரை வேந்தர்

     மரும லர்ப்புயஞ் சுமந்தன வாட்களை வாட்கள்

     பெருகு மூனிணஞ் சுமந்தன பிறங்கொளி பிறங்க.

41

     (இ-ள்) அன்றியும், சமுத்திரத்தைக் கொண்ட பெரிய இப் பூமியானது வெவ்விய குதிரைகளைத் தாங்கிற்று. அக்குதிரைகள் தனது விரைவைக் கொண்ட வேகத்தோடு அரசர்களைத் தாங்கின. அவ்வரசர்களது வாசனை தங்கிய புஷ்பங்களினாற் செய்யப்பட்ட மாலையைப் பூண்ட தோள்கள் வாட்களைத் தாங்கின. அவ்வாட்கள் ஒளிருகின்ற பிரபையானது பிரகாசிக்கும் வண்ணம் பெருகிய தசையையுங் கொழுப்பையுந் தாங்கின.

 

3801. பரியொ டும்பரி மிடைதலிற் பாரிட மிலையாற்

     றெரியும் வீரர்கண் மிடைதலிற் செலும்வழி யிலையால்

     விரியும் வெண்குடை மிடைதலில் வெயிற்பக லிலையா

     லெரியுஞ் செங்கதிர் வேன்மிடை தலிலிரு ளிலையால்.

42

     (இ-ள்) அன்றியும், குதிரைகளோடுங் குதிரைகள் நெருங்குவதினால் பூமியின்கண் இடமில்லாமலாயிற்று. விளங்குகின்ற வீரர்கள் ஒருவரோடொருவர் நெருங்குவதினால் செல்லுகின்ற மார்க்கங்களில்லாம லாயிற்று. விரிந்த வெள்ளிய குடைகள் ஒன்றோடொன்று நெருங்குவதினால் வெயிலைச் செய்கின்ற பகலான தில்லாமலாயிற்று. பிரகாசியா நிற்குஞ் செந்நிறத்தைக் கொண்ட வேலாயுதங்க ளொன்றோடொன்று நெருங்குவதினால் அந்தகாரமான தில்லாமலாயிற்று.