பக்கம் எண் :

சீறாப்புராணம்

1392


இரண்டாம் பாகம்
 

பக்கங்களிற் பரவவும், பூமியிலிருந்து எழும்புகின்ற தூளாகிய தூதை முன்னாற் போகச் செய்து அடித்தலைக் கொண்ட பல வாச்சியங்கள் இடியைப் போலும் முழங்கவும், விசாலமாகிய இப்பூமியும் உள்ளே போகவும் நடந்தது.

 

3806. கரைசெய் மாநதி யிடங்களுங் கடங்களுங் கடந்து

     வரையு மவ்வரைச் சாரலும் வனத்திடைக் கிடந்த

     திரைசெய் பேரொலி மடுக்களுந் திடர்களுந் குறுகி

     யரசர் நாயக முகம்மது சதுர்த்தல மடுத்தார்.

47

     (இ-ள்) அவ்வாறு நடந்து கரைகளைச் செய்த பெரிய ஆற்றினது தானங்களையும், காடுகளையுந் தாண்டி மலைகளையும் அம்மலைகளினது பக்கங்களையும், காட்டின்கண் கிடந்த அலைகளை எறிகின்ற பெரிய சத்தத்தையுடைய வாவிகளையும் மணற்குன்றுகளையும் அணுகிச் சென்று இராஜநாயகமான நபிகட்பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது சதுர்த்தலத்தைப் போய்ச் சமீபித்தார்கள்.

 

3807. புகர றும்பெரும் பாடியுஞ் சிறுகுடிப் புறமு

     மிகலெ னத்தனி பயத்தொடும் வயிறலைத் தேங்கிப்

     பகரு மாதரு மைந்தரு மடவியிற் படர

     வுகுதெ னுமலை யிடத்தினிற் படையொடு முறைந்தார்.

48

      (இ-ள்) அவ்வாறு சமீபித்த அவர்கள் குற்றமற்ற பெரிய நகரங்களிலும் சிற்றூர்ப் பக்கங்களிலுமுள்ள துதிக்கா நிற்கும் பெண்களும் புருடர்களும் யுத்தமென்று சொல்லி, ஒப்பற்ற பயங்கரத்தோடும் தங்கள் தங்கள் வயிற்றுகளில் அடித்து அழுது கொண்டு காடுகளிற் செல்லும் வண்ணம் உகுதென்று சொல்லும் மலையினது தானத்தில் தங்கள் சேனையோடுந் தங்கினார்கள்.

 

3808. குவியும் வெள்ளியம் பொருப்பெனப் படங்குகள் கோட்டிப்

     பவுரி வாம்பரித் தொகைபல நிரைநிரைப் படுத்தி

     யவிரும் பொன்னொளி விரித்தநி சானிக ளமைத்துத்

     திவளு மாவணம் வகுத்தரும் பாசறை செய்தார்.

49

     (இ-ள்) அவ்விதந் தங்கிய அவர்கள் திரண்ட அழகிய வெள்ளி மலையைப் போலும் கூடாரங்கள் வளைத்துக் கூத்தினது விகற்பத்தைக் கொண்ட பாய்கின்ற பல கூட்டமாகிய குதிரைகளை வரிசை வரிசையாக நிற்கும்படி கட்டி ஒளிரா நிற்கும் பொற்பிரகாசத்தைப் பரப்பிய நிசானிகளை யமையப் பண்ணித் திவளுகின்ற கடைவீதிகளுஞ் செய்து, அரிய பாசறைகளை இயற்றினார்கள்.