பக்கம் எண் :

சீறாப்புராணம்

1393


இரண்டாம் பாகம்
 

3809. கறுபு மைந்தனு மிக்கிரி மாவும்கா லிதுவுந்

     திறல டற்பெரும் படையுட னுகுதினிற் செறிந்து

     மறமு திர்ந்திகற் கிறங்கின ரெனவொரு வசன

     முறுச மர்ப்புலி முகம்மது காதினி லுரைத்தார்.

50

     (இ-ள்) அவர்கள் அவ்வாறியற்ற, தூதர்கள் யுத்தத்திற்குப் பொருந்திய புலியாகிய நமது நாயகம் நபிகட்பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களது செவிகளில் ஹறுபென்பவனது புதல்வனான அபாசுபியானென்பவனும், இக்கிரிமாவென்பவனும், காலிதென்பவனும், வலிமையையும் வெற்றியையுங் கொண்ட பெரிய சேனைகளோடும் உகுதென்று சொல்லும் மலையினது தானத்தில் கோபமானது முற்றப் பெற்று யுத்தத்திற்கு மிடைந்து இறங்கியிருக்கின்றார்களென்ற ஒப்பற்ற வார்த்தையைக் கூறினார்கள்.

 

3810. பூத லம்புகழ் மதீனமா புரத்தின்கீழ் புறத்திற்

     காத மாமெனக் காபிர்க ளடைந்தவை கழற

     வேதி லர்க்கட லரியெனு நபியிற சூல்கேட்

     டாத ரத்தஸ் காபிக டமையழைத் துரைப்பார்.

51

      (இ-ள்) இப் பூலோகமானது துதிக்கா நிற்குந் திருமதீனமா நகரத்திற்குக் கீழ்ப்பக்கத்தில் ஒருகாதவழி தூர மாகுமென்று சொல்லும் வண்ணம் அந்தக் காபிர்கள் வந்து சேர்ந்தவற்றை அவ்வாறு தூதர்கள் சொல்ல, சத்துராதிகளாகிய யானைகளுக்கு வலிமையைக் கொண்ட சிங்கமென்று சொல்லும் நமது நபிநாயகம் நபிகட் பெருமானார் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்கள் கேள்வியுற்று அன்பையுடைய அசுஹாபிமார்களைக் கூப்பிட்டுச் சொல்லுவார்கள்.

 

3811. கருத லாரிவ ணடுத்தடைந் தனர்குபிர் களைதற்

     கரிய நாயக னருளும்நம் பாலுள வடலிற்

     றெரியும் வீரத்தின் வானுரு மேறெனுந் திறலீ

     ரிரவி னியானொரு கனவுகண் டனனென விசைப்பார்.

52

     (இ-ள்) போர்புரிவதில் விளங்கா நிற்கும் வீரத்தினால் மேகத்தினிடத்துள்ள இடியென்று சொல்லும் வலிமையையுடைய அசுஹாபிமார்களே! சத்துராதிகளாகிய காபிர்கள் இந்தத் திருமதீனமா நகரத்தைச் சமீபித்து வந்திருக்கின்றார்கள். அந்தக் காபிர்களை இல்லாமற் செய்வதற்கு அருமையான நாயகனாகிய ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவின் காருண்ணியமும் நம்மிடத்துள்ளது. இன்றைய இராத்திரியில் யான் ஒரு சொப்பனத்தைக் கண்டேனென்று சொல்லுவார்கள்.