|
இரண்டாம் பாகம்
3812.
கேடின் முன்றிலிற் பசுவறுத் திவண்கிடப் பவும்போ
ராடல் வாளின்வாய் தாரைசற் றறவுதிர்ந் திடவு
மூடு மென்னுடற் சோட்டினிற் கரமுழு கிடவு
மேட லம்புயத் தீரிவை காண்டன னியைய.
53
(இ-ள்) இதழ்களைக் கொண்ட புஷ்பத்தினாற் செய்யப்பட்ட
மாலையைத் தரித்த திரளைக் கல்லையொத்த தோள்களையுடைய அசுஹாபிமார்களே! சிதைவற்ற இங்குள்ள
முற்றத்தில் பசுவானது அறுத்துக் கிடக்கவும், யுத்தஞ் செய்கின்ற எனது வாளாயுதத்தின் வாயினது கூர்மையானது
கொஞ்சம் அறும்படி உதிர்ந்திடவும், எனது சரீரத்தை மறைக்கின்ற சட்டையில் எனது கைகள் மூழ்கிடவுமான
இவைகளை பொருந்தும் வண்ணம் கண்டேன்.
3813.
அகத்தின் வாயலிற் பசுவறுத் திருப்பக்கண் டதனாற்
செகுத்தி டற்கரு மென்னுயிர்த் தோழரிற் சிலபே
ருகைத்த டர்ந்துவெங் காபிர்க டிரள்கெட வொடுக்கி
மிகுத்த வீரத்தி னுயிரிழந் திடுதலும் வேண்டும்.
54
(இ-ள்) வீட்டினது வாயலில்
பசுவானது அறுத்துக் கிடக்கும்படி கண்டதினால் அழித்தற் கருமையான எனது பிராணனை நிகர்த்த நேசர்களான
அசுஹாபிமார்களிற் சிலர் தங்களது குதிரைகளைச் செலுத்தி வெவ்விய காபிர்களது கூட்டமானது சிதையும்
வண்ணம் பொருதி அவர்களைக் குறையச் செய்து அதிகரித்த வீரத்தோடும் தங்கள் ஆவியை இழக்கவும்
வேண்டும்.
3814.
ஓங்குஞ் செங்கதிர் வாளதின் றாரைசற் றுதிரப்
பாங்கிற் கண்டதென் னுதிரத்தின் கலப்பினர் பரிவாற்
றாங்கும் வேலெடுத் தரிகளைச் செகுத்துவெஞ் சமரின்
வாங்கி டாதுநின் றுயிரினை வழங்கவும் வேண்டும்.
55
(இ-ள்) செந்நிறத்தைக்
கொண்ட பிரபையானது ஓங்கா நிற்கும் வாளாயுதத்தினது கூர்மையானது கொஞ்சம் உதிரும்படித் தகுதியோடுங்
கண்டது, எனது இரத்தக் கலப்பிலுள்ளவர்கள் மகிழ்ச்சியினா லேந்தா நிற்கும் வேலாயுதத்தைக் கையினா
லெடுத்துச் சத்துருக்களாகிய காபிர்களை அழித்து வெவ்விய யுத்தத்தில் பின்போகாமல் நின்று தங்கள்
பிராணன்களை கொடுக்கவும் வேண்டும்.
3815.
தரித்த சோட்டினிற் கரம்புகுந் திருப்பதென் றனுவின்
விரித்த வூறுபட் டுதிரங்க ளொழுகவும் வேண்டு
மொருத்த னம்மிடத் துளனவ னுதவிகொண் டிவணிற்
றிருத்தும் வெற்றியு முளசெழுஞ் சேவகத் திறத்தீர்.
56
|