|
இரண்டாம் பாகம்
நிற்குங் கோபத்தை யுடைய
வீரர்களான சஹாபாக்களுடன் அன்போடும் நடத்துகின்ற பொன்னினது பிரகாசத்தை பரவச் செய்யுங்
கடிவாளத்தை யுடைய குதிரைகள் சூழும் வண்ணம் வரிசையாகக் கூடாரங்களிட்டுப் பாடி வீடு செய்தார்கள்.
4129.
தூவியவ னப்பெடை யினத்தொடு துயின்ற
வாவிமல ரோடைசிறை வண்டிசை முரன்று
மேவிவளர் கின்றபொழி லெங்கணும் விரும்பி
யேவுறுசி லைக்கைவய வீரர்க ளிருந்தார்.
7
(இ-ள்) அவ்வாறு செய்து
பாணத்தைப் பொருந்திய கோதண்டங்களைத் தாங்கிய கைகளையுடைய விஜயத்தைக் கொண்ட வீரர்களான
அசுஹாபிமார்கள் சிறகுகளை யுடைய பெட்டை யன்னங்கள் தங்கள் தங்கள் இனத்தோடும் நித்திரை செய்கின்ற
தடாகக் கரைகளிலும், புஷ்பங்களையுடைய ஓடைக்கரைகளிலும், சிறகுகளையுடைய தேனீக்கள் இராகங்களைப்
பாடிப் பொருந்தி வளர்கின்ற சோலைகளிலும், மற்ற பல விடங்களிலும் ஆசையுற் றுறைந் திருந்தார்கள்.
4130.
முறித்தனர்கு லைக்கதலி முத்தமுதிர் கன்னல்
பறித்தனர்த டக்குவளை பைங்கமல நெய்த
றறித்தனர்சி னைப்பலவு தாழைபனை சூதங்
குறித்துவய னெற்கதிர்கள் கொய்துகுவை செய்தார்.
8
(இ-ள்) அப்படி யிருந்த
அவர்கள் தாறுகளைக் கொண்ட வாழை மரங்களையும், முத்தங்களைச் சிந்துகின்ற கரும்புகளையு முறித்தார்கள்.
தடாகங்களி லுள்ள குவளைப் புஷ்பங்களையும், பசிய தாமரை மலர்களையும், ஆம்பற் பூக்களையும் பறித்தார்கள்.
கிளைகளைக் கொண்ட பலாமரங்களையும், தென்ன மரங்களையும், பனைமரங்களையும், மாமரங்களையும் வெட்டினார்கள்.
வயல்களி னிடத்துள்ள நெற்கதிர்களை மதித்து அறுத்துப் போராகக் குவித்தார்கள்.
4131.
கொந்தலர்க டம்புதிமில் குங்குமம சோகு
கந்தநிறை செண்பகம கிற்கடு வுடுப்பை
சந்தனம கிழ்குரவு சாதியிவை யெல்லா
மிந்தனமெ னத்துணிசெய் தெங்கணுமே ரித்தார்.
9
(இ-ள்) அன்றியும்,
பூங்கொத்துக்கள் மலர்ந்த கடம்பு, வேங்கை, ஞாழல், பிண்டி, வாசனை நிறைந்த செண்பகம், அகரு,
அரிதகி, சீக்கிரி, சந்தனம், இலஞ்சி, குரவு, சாதியாகிய இந்த மரங்க ளெல்லாவற்றையும் விறகைப்போலுந்
துண்டங்களாக வெட்டி எவ்விடத்து மெரித்தார்கள்.
|