|
இரண்டாம் பாகம்
(இ-ள்) ஆதலினால் இந்த அரிய கொலைத் தொழிலைக்
கொண்ட பாதகனாகிய இவன் போகாமல் இவ்விடத்திலேயே இவனது இனிய ஆவியை மெலியும் வண்ணம்
வடுவற்ற பெரிய வாளாயுதத்தினாற் சிதைத்தல் எங்களுக்கு விருப்பமென்று வீரர்களாகிய அவ்வசுஹாபிமார்கள்
இந்தச் சமாச்சாரத்தைச் சொன்னார்கள்.
4242.
அறனும் வாய்மையு மன்பு மிரக்கமுந்
திறனும் வீறுங் குடிகொண்ட செய்கையோர்
மறமி குத்தவர் வாய்மொழி கேட்டுளங்
குறைவி லாது நிறைமொழி கூறுவார்.
65
(இ-ள்) புண்ணியமும்,
சத்தியமும், அன்பும், தயவும், வலிமையும், பெருமையும் வாசமாக இருக்கப் பெற்ற செய்கையை யுடையவர்களான
நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகி வசல்ல மவர்கள் கோபமான ததிகரிக்கப் பெற்றவர்களான அந்த அசுஹாபிமார்கள் அவ்வாறு
தங்கள் வாயினாற் சொல்லிய வார்த்தைகளைக் கேள்வியுற்று மனமானது குறைவின்றி நிறைகின்ற
வார்த்தைகளைச் சொல்லுவார்கள்.
4243.
கொலையும் வஞ்சமுங் கொண்டுவெங் கோறலி
னிலையி னின்றனர் நின்னப யம்மென
வலிதின் வந்து வணங்கின ரேயெனி
னலிவி லாதவர்க் காக்கவு நன்றரோ.
66
(இ-ள்) கொலையையுங்
குத்திரத்தையு மிதயத்தி னிடத்துக் கொண்டு வெவ்விய கொலைத் தொழிலினது நிலைமையில் நின்றவர்கள்
உனது அடைக்கலமென்று தானாக வந்து பணிந்தார்களேயானால் அவர்களை வாட்டமின்றிக் காத்தலும் நன்மையாகும்.
4244.
காட்டு திண்மற னுங்கதிர் வாளையும்
போட்டு விட்டெதிர் நின்று புலம்பியே
தாட்டு ணைத்தலஞ் சார்ந்தவிவ் வேழையை
வீட்டி னாலதில் வெற்றியுண் டாகுமோ.
67
(இ-ள்) ஆதலால் காட்டுகின்ற
திண்ணிய வீரத்தையும் பிரகாசம் பொருந்திய வாளாயுதத்தையும் போட்டு விட்டு நமது முன்னால் நின்று
அழுதுகொண்டு நமது இருசரணங்களையும் போற்றுகின்ற தவத்திற் பொருந்திய இந்தத் தரித்திரனைக்
கொன்றால் அதனால் விஜயமுண்டாகுமா? ஆகாது.
|