பக்கம் எண் :

சீறாப்புராணம்

1565


இரண்டாம் பாகம்
 

நடந்தன. இருமருங்கிலும் வீரங்கள் நடந்தன. நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிகாத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களது திருமேனி பரிமளிக்கக் கஸ்தூரி வாசனையானது இருபக்கத்திலும் நடந்தது. மற்ற சேனைகளனைத்தும் நடந்தன.

 

4303. சென்னிமதி யெனச்சருவந் திலங்கவடி

         வுறுமுடலிற் சிறந்த வெள்ளை

     மின்னணிகஞ் சுகியிலங்கப் பிடரிடைமுத்

         திரையிலங்க விரும்பி நாளும்

     பன்னுமறை வாயிலங்கக் கருணைவிழி

         மீதிலங்கப் படையி னோசைக்

     கன்னமுற வேயிலங்கப் பரிசுமப்ப

         வேகினர்வண் கபீபு மன்னோ.

9

      (இ-ள்) அவ்வாறு நடக்க, கீர்த்தியைக் கொண்ட ஹபீபென்னுங் காரணப் பெயரையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபிசெய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் தலையின் மீது சந்திரனைப் போலுஞ் சருவந்தமானது பிரகாசிக்கவும், அழகு பொருந்திய சரீரத்தின்கண் மேன்மைதங்கிய வெண்ணிறத்தைக் கொண்ட பிரகாசத்தைப் பெற்ற அழகிய கவசமானது பிரகாசிக்கவும், பிடரின்கண் இலாஞ்சனை யானது பிரகாசிக்கவும், ஆசையுற்றுப் பிரதிதினமு மோதா நிற்கும் புறக்கானுல் கரீமென்னும் வேதவசனமானது வாயினிடத்துப் பிரகாசிக்கவும், சேனையின் முழக்கமானது காதுகளிற் பொருந்தும் வண்ணம் பிரகாசிக்கவும், குதிரையானது தாங்கவுஞ் சென்றார்கள்.

 

4304. பெரியமுலைச் சிறியவிடைப் பவளவிதழ்த்

         தரளநகைப் பிறழும் வாட்கட்

     கரியகுழற் பிடியினிடைச் சிலையினுதற்

         செழுமைதருங் கணிப்பின் மாத

     ரிருபுறத்து மடைப்பைமணிச் சிவிறிமரை

         நறும்பேழை யினைய வேந்தப்

     பொருவரிய வழகுமயி லாயிசா

         வெனுங்கொடியும் போனா ரன்றே.

10

     (இ-ள்) அவ்வாறு செல்ல, ஒப்புச் சொல்லுதற் கருமையான அழகைக் கொண்ட மயில்போலுஞ் சாயலையுடைய ஆயிஷா றலியல்லாகு அன்ஹாவென்று கூறுங் கொடிபோல்பவர்களும் பெரிய முலைகளையும், சிறிய மருங்குலையும், பவளம் போன்ற