பக்கம் எண் :

சீறாப்புராணம்

1570


இரண்டாம் பாகம்
 

இப்பொழுதே எடுங்கள்! எடுங்க ளென்று சொல்லித் தங்கள் சைனியத்தோடும் அவர்களுக்கு எதிராகப் போய் எதிர்த்தார்கள்.

 

4313. அடுத்தனவெம் பரியினொடுந் தானையொடுஞ்

          சேனையொடு மங்கு மிங்கு

     மடுத்தனவாண் டிருபடையு மொருபடையீ

          தென்னவணி வயங்க மாந்தர்

     கடுத்துவிழி நெருப்பெழவாய்த் தின்றுமணிச்

          செழுங்கரத்திற் கணிப்பி லாது

     விடுத்தபடைக் கலன்களுயர் விண்ணொடுமண்

          ணையுமறைத்த வெளியி லென்ன.

19

     (இ-ள்) அவ்வாறு எதிர்க்க, அந்த யுத்தக்களத்தில் இருசைனியங்களும் இது ஒரே சைனியமென்று சொல்லும் வண்ணம் அணியானது பிரகாசிக்கும்படி நெருங்கின. வெவ்விய குதிரைகளோடும் தூசுப் படையோடும் சேனையோடும் அங்கு மிங்கும் நிறைந்தன. வீரர்கள் கோபித்துக் கண்களிலிருந்து அக்கினியானது ஓங்கும் வண்ணம் அதரங்களைக் கறித்து அழகிய செழுமையான கைகளால் அளவின்றி விட்ட ஆயுதங்கள் வெளியானது இல்லையென்று சொல்லும்படி உயர்ந்த ஆகாயத்தையும் பூமியையும் மறையச் செய்தன.

 

4314. குடர்துமிந்த சிலநெடிய வாறுமிந்த

         சிலவேகங் கொண்டு பாயு

     மடிதுமிந்த சிலவுளையின் களந்துமிந்த

         சிலமணிசூ ழணியின் வேய்ந்த

     வுடறுமிந்த சிலநிமிர்ந்த செவிதுமிந்த

         சிலமூக்கி னுதிரங் கால

     மடைதிறந்த தெனச்சொரியத் தலைதுமிந்து

         கிடந்தசில வாசி மன்னோ.

20

     (இ-ள்) அதனால் சில குதிரைகள் குடல்க ளறப் பெற்றன. சிலகுதிரைகள் நீண்ட வால்க ளறப் பெற்றன. சில குதிரைகள் வேகத்தைக் கொண்டு தாவா நிற்குங் கால்க ளறப்பெற்றன. சில குதிரைகள் புறமயிரை யுடைய கழுத்துக ளறப்பெற்றன. சில குதிரைகள் இரத்தினங்கள் சூழ்ந்த ஆபரணங்களினா லலங்கரிக்கப்பட்ட சரீரங்களறப் பெற்றன. சில குதிரைகள் நிமிர்ந்த காதுக ளறப்பெற்றன. சிலகுதிரைகள் நாசியிற் பொருந்திய இரத்தமானது கொப்பளிக்கவும், மடை திறந்தாற் போற் சிந்தவும் தலைக ளறப்பெற்றுப் பூமியிற் கிடந்தன.