|
இரண்டாம் பாகம்
4347.
வடிவுக்கொரு பொருளேபொழின் மழலைச்சிறு குயிலே
கடலுற்றெழு மமுதேவிரி கதிருக்கொரு மணியே
குடியிற்பெறு சுடரேயதி குலனுக்கரு நிதியே
படியிற்சசி யெனவேயடிக் கடிநோக்கினர் பரிவின்.
53
(இ-ள்) அவள் அவ்வாறு
சொல்ல, அழகிற்கு ஒப்பற்ற பொருளானவளே! சோலையின் கண்ணுற்ற மழலை மொழிகளை யுடைய சிறிய
குயிலானவளே! சமுத்திரத்தின்கண் பொருந்தியெழா நிற்கும் அமுதானவளே! விரிந்த பிரகாசத்திற்கு
ஒப்பற்ற இரத்தின மானவளே! குடியிற் பெற்ற தீபமானவளே! ஓங்கா நிற்கும் குலத்திற்கு அரிய நிதியானவளே!
இப்பூமியி னிடத்துள்ள சந்திரனானவளே! என்று சொல்லி அன்போடும் அடிக்கடி பார்த்தார்கள்.
4348.
வெல்லுஞ்சசி முகமும்வளை வில்லின்றர நுதலுஞ்
செல்லும்பிடி நடையுந்துவழ் சின்னஞ்சிறி திடையுஞ்
சொல்லுந்திரு மொழியும்மிணை துள்ளும்பிணை விழியு
மல்லும்பொரு குழலுமிவை யெல்லாமுட லயர்த்த.
54
(இ-ள்) அவ்வாறு
பார்க்க, அந்தகாரமாகிய அஞ்ஞானத்தை வெல்லா நிற்குஞ் சந்திரனைப் போன்ற வதனமும், வளைந்த
வில்லுக்கு நிகரான நெற்றியும், செல்லுகின்ற பெட்டை யானையைப் போன்ற நடையும், மிகவுஞ் சிறிதான
துவழ்கின்ற அழகிய இடையும், பேசுகின்ற அழகிய வார்த்தையும், துள்ளா நிற்கும் மானினது மருண்ட
பார்வையை யொத்த இரு கண்களும், இருட்டை யொத்த கூந்தலுமாகிய இவைகளனைத்தும் அவர்களது உடலை
மறக்கச் செய்தன.
4349.
மோகத்துய ருடனேநினை வறியாவகை முழுது
மாகத்தினின் மீறப்புக ழாண்மைத்திற னயினார்
பாகொத்தமெய் மொழியார்முக நோக்கிப்பய மில்லா
நாகத்தொடு பேசுந்திரு வாய்விண்டுரை நவில்வார்.
55
(இ-ள்) அவ்வாறு செய்ய,
மோக வேதனை யானது உடனே தங்கள் ஞாபகத்தை யுணராத விதத்தில் சரீரத்தின்கண் முழுவது மதிகரிக்க,
கீர்த்தியினது ஆண்டன்மையைக் கொண்ட வலிமையை யுடைய நயினாரான நமது நாயகம் நபிகட்
பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள்
பால் போலு மினிய சத்திய வார்த்தையை யுடையவளான அவளது வதனத்தைப் பார்த்து அச்சமின்றிச்
சர்ப்பத்தோடும் பேசிய அழகிய வாயைத் திறந்து சில வார்த்தைகளைச் சொல்லுவார்கள்.
|