பக்கம் எண் :

சீறாப்புராணம்

1587


இரண்டாம் பாகம்
 

கந்தக்குப் படலம்

 

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

 

4356. அணியினுக் கணியென் றோது மவிர்மதி முகத்தி னாரை

     மணமுடித் தினிது வந்து மதீனத்தி னிருக்கு நாளிற்

     பணிவிட மனைய வஞ்ச ரறமெனும் பயிர்க்கு நாளும்

     பிணியெனுந் தகைய காபிர் செய்தவை பேசு வாமால்.

1

     (இ-ள்) நமது நாயகம், எம்மறைக்குந் தாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுனா செய்யிதுல் முறுசலீன் ஹபீபுறப்பில் ஆலமீன் காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் அழகுக் கழகென்று கூறும் ஒளிரா நிற்குஞ் சந்திரனைப் போன்ற வதனத்தை யுடையவர்களான அந்தச் சுவைறா றலியல்லாகு அன்ஹா அவர்களை அவ்வாறு விவாகஞ் செய்து இனிமையோடும் மகிழ்ந்து திருமதீனமா நகரத்தின்கண் ணிருக்கின்ற காலத்தில், சர்ப்பத்தினது விஷத்தை நிகர்த்த வஞ்சகத்தை யுடையவர்களான புண்ணியமென்று கூறும் பயிர்க்குப் பிரதி தினமும் நோயென்று சொல்லுந் தன்மையை யுடைய காபிர்கள் செய்தவற்றை யாம் சொல்லுவாம்.

 

4357. நானிலத் திருந்து நாளுந் தேடியே நரகி னெய்து

     மீனவன் ககுபு கேளி ரென்பவர் சுகுறா நீந்திப்

     போனநா ளளவுஞ் சாமில் வஞ்சகம் புணர்த்தி நீதித்

     தீனரை யிடுக்கண் காண விருந்தனர் திறமை யில்லார்.

2

     (இ-ள்) குறிஞ்சி, நெய்தல், மருதம், முல்லையென்னும் நான்குவகை நிலங்களைக் கொண்ட இப்பூமியி னிடத்திருந்து பிரதி தினமும் விரும்பி நரகலோகத்திற் போய்ச் சேர்ந்த கீழ்மை யுடையவனான ககுபென்பவனது பந்துக்களென்று சொல்லப் பட்டவர்களாகிய வல்லமை யில்லாத காபிர்கள் தாங்களிருந்த அந்தச் சுகுறாவென்னும் நகரத்தை விட்டும் நீங்கிப் போன நாள் முதலாக ஷாமிராச்சியத்திற் குத்திரங்களையுண்டாக்கி நியாயத்தைக் கொண்ட தீனுல் இஸ்லா மென்னும் மெய்ம்மார்க்கத்தை யுடைய அசுஹாபிமார்களை வருத்தும் வண்ண மிருந்தார்கள்.

 

4358. அவர்களிற் றலைமை மிக்கோ னகுத்தபு தனைய னீண்ட

     கவர்மன குயையென் றேதும் பெயரினன் கபட மூட்டுஞ்

     சுவையறு மொழியா னாளும் பகையினைத் தொடங்கி நின்றோன்

     றவிர்கிலா நாண மற்றோன் றருமத்தின் றகைமை யில்லோன்.

3