இரண்டாம் பாகம்
(இ-ள்) அவ்வா றிருந்தவர்களான
காபிர்களில் தலைமைத் தனத்தால் மேன்மைப் பட்டவனும், அகுத்த பென்பவனது புத்திரனும், நீட்சியைக்
கொண்ட பலகருத்துகளினது இதயத்தையுடைய குயையென்று கூறும் நாமத்தை யுடையவனும், வஞ்சகத்தை மூளச் செய்யு
மினிமையற்ற வார்த்தைகளை யுடையவனும், பிரதி தினமும் விரோதத்தை யாரம்பித்து நின்றவனும்,
மாறாத வெட்கமற்றவனும், புண்ணியத்தின் தகுதியில்லாதவனும்.
4359.
சந்திர னொளியை யோட்டித் தன்னொளி காட்டு மேனிச்
சுந்தரத் தூதர்க் கோற றுணிவது விருப்ப முற்றோன்
வெந்தெரி கலுழுங் கண்ணார் வீழ்த்திடக் ககுபு விண்ணி
லுந்தினா னென்னும் புன்மை நோய்கிடந் துளப்ப வன்றே.
4
(இ-ள்) சந்திரனது பிரகாசத்தை
யோடச் செய்து தனது பிரகாசத்தைக் காட்டா நிற்குந் திருமேனியினது அழகைக் கொண்ட றசூலான நமது
நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி
வசல்ல மவர்களைக் கொலை செய்யத் துணிதலை யிச்சித்தவனுமான அவன் அக்கினியானது எரிந்து சிந்தாநிற்குங்
கண்களை யுடையவர்களான முகம்மது றலியல்லாகு அன்கு அவர்கள் குத்திப் பூமியின்கண் வீழ்த்தக்
ககுபென்பவன் மாண்டு ஆகாயத்தின்கண் சென்றானென்று சொல்லிய இழிவான பிணியானது கிடந்து கலக்க.
4360.
ஆற்றிலன் றுயரங் கள்ள மடங்கில னதிக வேகச்
சீற்றமு மொடுங்கி லன்போர்ச் சிந்தனை யெறிகி லன்றீக்
காற்றெனு முயிர்ப்பு வீக்கங் கழித்திலன் கருதாப் புன்மை
தேற்றில னினைய நாளு மிருந்தனன் செயலை யோரான்.
5
(இ-ள்) தனது செய்கையை
இன்னதென்று தெரியாத அந்தக் குயை யென்பவன் தனது துன்பத்தைச் சகித்திலன். வஞ்சகமானது தணிந்திலன்.
மிகுத்த கடுமையைக் கொண்ட கோபமு மடங்கிலன். யுத்தஞ் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தையும் வீசிலன்.
அக்கினிக் காற்றென்று சொல்லும் பெருமூச்சினது வீக்கத்தையும் விலக்கிலன். நினைக்கத் தகாத
இழிவான விடயங்களையுந் தீர்த்திலன். இத்தன்மையாகப் பிரதி தினமு மிருந்தான்.
4361.
வங்கிடத் துரிய மாந்தர் வழிமுறை நின்ற வேந்தர்
தங்கிய சூழ்ச்சி வல்லோர் போருடைத் தலைவர் மாறா
தெங்கினும் வஞ்ச மூட்டு மெகூதிக ளிவரை நோக்கி
வெங்கடு மனத்தன் வாய்மை யினையன விரிக்க லுற்றான்.
6
|