பக்கம் எண் :

சீறாப்புராணம்

1591


இரண்டாம் பாகம்
 

4368. இடுக்கணுற் றுலைந்தோ ரின்ப மெய்துவ ரெதிரி னின்று

     மிடுக்கறத் தோற்று நின்றார் வெற்றியும் பெறுவ ரன்றோ

     கொடுக்குமை முகிலி னன்னீர் கோதுறத் தீனர் வெம்போர்

     தொடுக்குவன் விசயங் காணத் திசைகளுந் துணுக்கங் கொள்ள.

13

     (இ-ள்) நீரைத் தரா நிற்குங் கரிய மேகத்திற் கொப்பானவர்களே! துன்பத்தைப் பொருந்தி வருந்தினவர்கள் சுகத்தைப் பெறுவார்கள். எதிரில் நின்று வலிமையறும் வண்ணந் தோற்று நின்றவர்கள் வெற்றியையு மடைவார்கள். ஆதலால் யான் வெற்றியைப் பெறவும், எண்டிசைகளு மச்சத்தைக் கொள்ளவும், அந்தத் தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்தை யுடையவர்கள் குற்றத்தைப் பொருந்தவும் வெவ்விய யுத்தத்தை யாரம்பிப்பேன்.

 

4369. குன்றுறழ் வலிய மொய்ம்பின் கொற்றவர் வேந்தன் மிக்க

     வென்றிசேர் மடங்க லன்னான் ககுபெனும் வீரர் வீரன்

     பொன்றிய பழியும் வாங்கிப் பூவினிற் சீர்த்தி வித்தித்

     துன்றிய பகையுந் தீர்த்துத் தீமையுந் துடைப்பன் மன்னோ.

14

     (இ-ள்) அன்றியும், மலையைப் போன்ற பெரிய தோள்களையுடைய அரசராதிபனும் மிகுத்த விஜயத்தைப் பொருந்திய சிங்கத்தை நிகர்த்தவனுமான ககுபென்று சொல்லும் வீரர்களது தலைவன் மாண்ட பழியையும் வாங்கி இந்த வுலகத்தின் கண் கீர்த்தியாகிய பயிரை விதைத்து நெருங்கிய விரோதத்தையு மொழித்து அவர்களது பொல்லாங்கையு மில்லாமற் செய்வேன்.

 

4370. கானெலாஞ் சிரம தாகக் கடலெலாங் குருதி யாக

     வானெலா முயிர தாக மண்ணெலாம் பிணம தாக

     வூனெலாம் படைய தாக வுடலெலாங் கவந்த மாகத்

     தீனெலாந் திசையி னோடச் செய்குவன் றிறமை பார்மின்.

15

     (இ-ள்) அன்றியும், காடு முழுவதுந் தலைகளாகவும், கடல் முழுவது மிரத்தமாகவும், ஆகாய முழுவது முயிர்களாகவும், பூமி முழுவதும் பிரேதங்களாகவும், ஆயுதங்கள் முழுவதுந் தசைகளாகவும், உடல் முழுவதுங் குறைகளாகவும், தீனுல் இஸ்லாமென்னும் மார்க்க முழுவதும் எண்டிசைகளிலு மோடவுஞ் செய்கின்றேன். எனது வல்லமையைப் பாருங்கள்.

 

4371. வெம்பசி தீண்டி நாளு மெலிந்துகண் டுயிலும் வாள்வே

     லம்பினுக் குயிரூ னென்னு மாரமு தூட்டி நீண்ட

     வும்பரிற் பறவை பாட வுலகினி லலகை யாடச்

     சம்பொடு ஞமலி கூடி விருந்துணச் சமைப்பன் மன்னோ.

16